செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றபட்டதை எதிர்த்து  மேல்முறையீடு - உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 14-ம் தேதி கைது செய்தது. அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், ஜூன் 28 வரை ரிமாண்ட் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில், அவரது மனைவி மேகலா, உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை அடுத்து, செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தது. மருத்துவமனையிலேயே வைத்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை 8 நாட்கள் விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி அனுமதி அளித்தார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான சிறப்பு அமர்வில் முறையிட்டார்.

‘‘செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றதே தவறு. அதை விசாரித்த நீதிபதிகள், அவரை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்ததும் தவறு. அவரது உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர் குழுவை கொண்டு பரிசோதனை
நடத்தி, அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க கோரியிருந்தோம். அதை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

15 நாட்கள் காவல் கோரிய நிலையில், 8 நாட்கள் மட்டுமே விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையிலேயே வைத்து விசாரிப்பதும் சாத்தியமற்றது. அவரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து சுதந்திரமாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரினார். ஆனால், உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த மனு நாளை (ஜூன் 21) விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

இலாகா இல்லாமல் நீடிக்க முடியாது என வழக்கு: சென்னை: தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அவரிடம் இருந்த மின்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை ஆகியவை வேறு அமைச்சர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார். குற்ற வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஒருவர் அமைச்சராக தொடர முடியாது என்பதால், ஆளுநர் ஏற்க மறுத்தது சரியானதே. இது ஆளுநரது தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனாலும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது சட்ட விரோதம். அதை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE