அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அனுமதியை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார்.

மேலும், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்படி, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, கவுதம சிகாமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE