மதுரை வழக்கறிஞர் முகமது அப்பாஸுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன: உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ வாதம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தேசவிரோத செயல்களில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞர் அப்பாஸுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றம் ஆராயலாம் என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன், "பாப்புலர் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்காக ஆஜரானதற்காக அப்பாஸை கைது செய்துள்ளனர். எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பென் டிரைவ் கைப்பற்றியதாக என்ஐஏ அதிகாரிகள் குற்றம்சாட்டுகிறார். பென் டிரைவ் வைத்திருப்பது குற்றமாகாது. அதில் ஆதாரங்கள் உள்ளதா? என கண்டறிய வேண்டும். பாப்புலர் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கிய தலைவராகவும், ஆயுத பயிற்சி அளிப்பவராகவும் இருந்தார் என எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளது" என்று வாதிட்டார்.உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம், மதுரை பார் அசோசியேஷன் சார்பிலும், வழக்கறிஞர் முகமது அப்பாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, என்ஐஏ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் என்ஐஏ எச்சரிக்கையுடன் செயல்பட்டது. கடந்த மார்ச் மாதம், இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போதே முகமது அப்பாஸுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்த போதும், கூடுதல் ஆதாரங்களுக்காக காத்திருந்து தற்போது வழக்கில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேஃஸ்புக் பதிவுக்காக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது. கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் ஆடியோ சிக்கியுள்ளது. அவரது தொலைப்பேசியை ஒட்டுக் கேட்டபோது கிடைத்த தகவலின் அடிப்ப்படையிலும் அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.வழக்கறிஞர் முகமது அப்பாஸ் ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் இருப்பவரின் காவலை சட்டவிரோதம் எனக்கூற முடியாது. இந்த வழக்கு தொடர்பாக கேஸ் டைரியை நீதிமன்றம் ஆராயலாம்" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கேஸ் டைரி மற்றும் ஆடியோப் பதிவுகளை தயாராக வைத்திருக்கும்படி கூறி, வழக்கின் விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்