திருவாரூர் | ஓடம்போக்கி ஆற்றில்  ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், ஓடம்போக்கி ஆற்றில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 19) திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், விளமல் அருகில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓடம்போக்கி ஆற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் தொலைநோக்கு பார்வையோடு, நிகர சாகுபடி பரப்பினை உயர்த்தவும், நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் மேம்படுத்தவும், கால்வாய்கள், வாய்க்காய்கள், ஏரிகள் போன்றவற்றை புனரமைத்து பாதுகாக்கும் பணிகளை ஆண்டுதோறும் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பெருமக்கள் கோரும் இடங்களில் தூர்வார ஆணையிட்டு, அப்பணிகள் நடைபெறும் இடங்களில் நேரில் ஆய்வு செய்தும் வருகிறார். அதன்படி, காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் 9.6.2023 அன்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

காவிரி டெல்டா பகுதியின் கடைமடை பகுதிகளான திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெண்ணாறு உப வடிநிலப்பகுதி மற்றும் காவிரி உப வடிநிலப்பகுதி ஆகிய இரண்டு பெரிய உப வடிநில பகுதிகள் அமைந்துள்ளன. வெண்ணாறு உப வடிநிலப்பகுதியில் 25 ஆறுகள் மூலமாக 3,90,293 ஏக்கரும் காவிரி உப வடிநிலப்பகுதியில் 19 ஆறுகள் மூலமாக 1,18,362 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன. இந்த ஆறுகளிலும், வடிகால்களிலும் ஆகாய தாமரைகள் ஏராளமாக படர்ந்து வளர்வதால் பாசன நீர் செல்வதற்கும், மழை வெள்ள காலங்களில் வடிகால்களில் தண்ணீர் வடிவதற்கும் மிகுந்த தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

கடந்த 9.6.2023 அன்று முதல்வர் காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்த போது, விவசாய பெருமக்கள் நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அதன் அடிப்படையில், நீர்வளத்துறை வாயிலாக ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிக்காக முதற்கட்டமாக, காவிரி டெல்டா பகுதியின் கடைமடை பகுதிகளான திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டார்.அதன்படி, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், ஒடம்போக்கியாற்றில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளை தமிழக முதல்வர் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒடம்போக்கியாறு திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சுமார் 29,835 ஏக்கர் நிலங்களுக்கு பாசனமளிக்கிறது. ஒடம்போக்கியாறு அம்மையப்பன், விளமல், தன்டளை, விஜயபுரம், கள்ளிக்குடி, காணூர், நீலப்பாடி, கீவளுர், சிக்கல், நரியங்குடி ஆகிய ஊர்களின் வழியே சென்று இறுதியில் கடுவையாற்றில் கலந்து பின் கடலில் கலக்கிறது. ஒடம்போக்கியாற்றில் 126.100 முதல் 129.800 கிலோ மீட்டர் வரை ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளது. இதனால் பாசனத்திற்கு முறையாக தண்ணீர் செல்ல இயலாத நிலையும், மழைக்காலங்களில் வெள்ளநீர் தங்கு தடையின்றி செல்ல இயலாத நிலையும் உள்ளது. எனவே, இதனை அகற்றிட வேண்டி விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் ஓடம்போக்கியாறற்றில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ.மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. பூண்டி கலைவாணன்,சாக்கோட்டை க. அன்பழகன், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சாருஸ்ரீ, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE