முதல் மெட்ரோ வந்தே பாரத் ரயில்: ஐசிஎஃப்-பில் இந்தாண்டு இறுதிக்குள் தயாரித்து அனுப்ப திட்டம்

By மு.வேல்சங்கர்

சென்னை: சென்னை ஐசிஎஃப்-பில் 12 பெட்டிகள் கொண்ட மெட்ரோ வந்தே பாரத்ரயிலை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் முதல் ரயில் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக, ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை) திகழ்கிறது. இங்கு இதுவரைபல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிறப்பு வாய்ந்த இந்த ஆலையில் தற்போதுநாட்டிலேயே அதிக வேகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது.

முதல் வந்தே பாரத் ரயில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த ரயிலின் சேவை புதுடெல்லி - வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ல்தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகின்றன.இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

4 வகை ரயில்கள்: இதையடுத்து இவ்வகை ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. தவிர, மெட்ரோ வந்தே பாரத் ரயில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில், புறநகர் வந்தே பாரத் ரயில் ஆகிய 4 வகைகளில் வந்தே பாரத்ரயில்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றில், தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில் இந்த ஆண்டு இறுதியில் தயாரிக்கப்பட உள்ளது. இதுபோல, மெட்ரோ வந்தே பாரத் ரயிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் மெட்ரோ வந்தே பாரத் ரயிலை இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரித்து, ரயில்வே வாரியத்துக்கு ஒப்புதல் பெற அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ``மெட்ரோ வந்தே பாரத் ரயில் என்பது 12 பெட்டிகள் கொண்ட ரயிலாகும். வந்தே பாரத் வடிவமைப்பிலான நடுத்தர தொலைவிலான நகரங்களுக்கு இடையேயான ரயில் தொடராகும். நடுத்தர தூரம் மற்றும் சற்றுநீண்ட தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இயக்கப்படும் `மெமு' ரயில்களுக்கு பதிலாக இவை இயக்கப்பட உள்ளன" என்றனர்.

சிறப்பு அம்சங்கள்: இதில் இருப்பவை வந்தே பாரத்ரயில் போன்றே ஏரோ டைனமிக் வடிவமைப்பு கொண்ட பெட்டிகளாகும். மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படக் கூடியவை. எடை குறைவானவையாகவும் குஷன் வசதி கொண்ட இருக்கைகளுடனும் இருக்கும். 7 பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். ரயில் பெட்டிகளின் இருபுறமும் மொத்தம் 4 கதவுகள் தானாக திறந்து மூடக்கூடிய வசதியுடனும் வெளிப் புற காட்சிகளைப் பார்த்து ரசிக்கக் கூடிய அளவுக்கு அகலமான பெரிய ஜன்னல்களுடனும் இருக்கும்.

முழுவதுமாக சீல் செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் இடையிடையே இணைப்புகள் இருக்கும். இதனால், ரயிலின் உள்ளே சத்தமோ மழை பெய்யும் பட்சத்தில் மழைத்துளிகளோ, வெயிலோ வராமல்இருக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள் இருபுறமும் இடம்பெறும்.

ரயில் பயணிக்கும் பாதை விளக்கப்படங்கள், ரயில் மேலாளருடன் அவசரக் காலத்தில் பேசக்கூடிய டாக் பேக் வசதி, சிசிடிவி கேமராக்கள், செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதி, தானியங்கி தீ உணர்வு மற்றும் எச்சரிக்கை அலாரம் ஆகியவை இடம்பெறும். ஒரே வழித்தடத்தில் எதிரெதிரே ரயில் வந்து மோதிக் கொள்ளாமல் இருக்க, தானாகவே எச்சரிக்கை செய்து ரயிலை நிறுத்தும் கவச் நவீன கருவி இடம்பெறும்.

400 வந்தே பாரத் ரயில்கள்: சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. மெட்ரோ வந்தே பாரத் ரயிலில் முதல் தொடர் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரித்து, வாரியத்துக்கு அனுப்பப்படவுள்ளது.

ரயில்வே வாரியம் அனுமதி கிடைத்த பிறகு, மெட்ரோ வந்தே பாரத் ரயில் தயாரிப்பு தீவிரப்படுத்தப்படும். 2023-24-ம் உற்பத்தி ஆண்டில், சென்னை ஐசிஎஃப்-பில் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்