சென்னை: ஓய்வு பெற்ற ஓட்டுநர்களுக்கு பணிபுரிய அழைப்பு விடுத்துள்ள மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகத்துக்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் இல்லாததால் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர் பற்றாக்குறை என்பது தொடர் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக நாள்தோறும் சுமார் 800 பேருந்துகளை இயக்க முடியாத நிலை இருப்பதாகவும், குறைந்தபட்சம் 20 ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பணி கிடைப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், பேருந்தை இயக்காமல் டீசல் நிரப்புதல் உள்ளிட்ட இதர பணிகளை மேற்கொள்ளும் பணிமனை ஓட்டுநர் என்னும் பணியை ஒப்பந்த அடிப்படையில் வழங்க மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்தது. இதன் மூலம் பணிமனை ஓட்டுநர்களை சாலையில் பேருந்தை இயக்கச்செய்து, சீரான சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நிரந்தரப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளக் கூடாது என்பதால், இதற்கு கண்டனம் தெரிவித்து சிஐடியு வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது. இதையடுத்து, அந்த நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ள மாநகர போக்குவரத்துக் கழகம் ஓய்வுபெற்ற ஓட்டுநர்களை பணிக்குஅமர்த்த முடிவு செய்துள்ளது.
பணிமனைகளில் அறிவிப்பு: இது தொடர்பாக பணிமனைகளில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில், "பணிமனையில் பணிபுரிய ஓய்வு பெற்ற 63 வயதுக்குட்பட்ட ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ரூ.800 ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ள ஓட்டுநர்கள் தங்களின் பணிக்கான சான்று மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் தலைமையகத்தில் உள்ள பணியாளர் நலன் பிரிவை நேரில் அணுகவும்" என கூறப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: பேருந்துகளில் பணிபுரிய உடல்நிலை ஒத்துழைக்காதவர்களுக்கு பணிமனை ஓட்டுநர் பணி வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இந்த பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான நியமனத்தை மேற்கொள்ள முடிவெடுத்த நிர்வாகம், தற்போது ஓய்வு பெற்றவர்களை அழைத்துள்ளது.
இவ்வாறு வருவோரை வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க அனுப்பவும் திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. அப்படிச் செய்தால் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். இப்படி அடுத்தடுத்து தற்காலிகமானவற்றை தேர்வு செய்யும் நிர்வாகம், ஏன் காலி பணியிடங்களை நிரப்ப நிரந்தர நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.
இத்தகைய செயல்பாடுகள் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை நிச்சயம் வஞ்சிக்கும். அண்மையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், பிற போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்த தொழிலாளர்துறை கடும் கண்டனத்தைத் தெரிவித்து, தக்க அறிவுறுத்தலை வழங்கியிருந்தது.
இதையும் மீறி மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகம் செயல்படுகிறது. இது தொடர்பாக நேற்று மாலை நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில்,மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பணிமனைகளிலும் நாளைய தினம் (ஜூன் 20) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago