சிவகங்கை | காளையார்கோவில் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட 3 சுகாதார வளாகங்கள்: பயன்பாட்டுக்கு வராமலேயே சேதம்

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே தரமற்ற முறையில் 3 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. மேலும் அவை பயன்பாட்டுக்கு வராமலேயே சேதமடைந்தன.

மாரந்தை ஊராட்சியில் மாரந்தை, மேலச்சேத்தூர், கோலாந்தி ஆகிய 3 கிராமங்களில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் தலா ரூ.5.25 லட்சத்தில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. இந்த வளாகங்கள் கட்டும்போதே தரமின்றி கட்டுவதாக புகார் எழுந்தது.

ஆனால் ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கோலாந்தியை தவிர்த்து மற்ற 2 சுகாதார வளாகங்களுக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டன. தரமில்லாத குழாய்களால் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பணிகள் முடிந்து ஓராண்டாகியும் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. தற்போது மேற்கூரையும், சுவரும் சேதமடைந்து வருகின்றன. இதனால் ரூ.15.75 லட்சம் அரசு பணம் வீணாகியுள்ளது.

மாரந்தையில் சேதமடைந்த சமுதாய சுகாதார வளாகம்.

இதையடுத்து 3 சுகாதார வளாகங்களையும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஊராட்சித் தலைவர் திருவாசகத்திடம் கேட்டபோது, ''தண்ணீர் விட்டாலே குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது'' என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE