“என்னை சீண்டாதீங்க” - செய்தியாளர் சந்திப்பில் கண்கலங்கிய குஷ்பு

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கண்டித்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

திமுக பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பலரும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு நடிகை குஷ்பு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

அப்போது அவர், "பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கருணாநிதி இருந்தபோது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதையும் நான்கு பேர் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். இதை சொல்வதால் நாளைக்கு என் வீட்டின் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினாலும் அதுபற்றி எனக்கு கவலை கிடையாது.

ஆண்கள் ஒரு பெண்ணை இழிவாகப் பேசும்போது, அவர்கள் அவளை ஒரு மகளாகவோ, மருமகளாகவோ, தாயாகவோ பார்ப்பதில்லை. நான் எனக்காகப் பேசவில்லை. அனைத்து பெண்களுக்காகவும் பேசுகிறேன். பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது. வந்தால் திருப்பி அடிப்போம். யாரை நம்பியும் நான் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. நான் என் திறமையை நம்பி வந்துள்ளேன்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. உங்கள் வீட்டுப் பெண்களை இப்படி பேசுவீர்களா? உங்கள் மொழியிலேயே என்னால் பதில் கொடுக்க முடியும். ஆனால் அப்படிச் செய்தால் அது என் அம்மாவை அசிங்கப்படுத்துவதற்கு சமம். என் வளர்ப்பை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. இது போன்ற செயல்கள் சரியா? இதுதான் திராவிட மாடலா? என்னுடைய கேள்விகளுக்கு பதில் கொடுக்க இயலவில்லை என்பதால்தான் இப்படி தரக்குறைவாக பேசுகிறார்கள். எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தால் தான் இவர்களுக்கு புத்தி வரும். இன்று இருக்கும் திமுகவில் இப்படிப்பட்ட ஆட்களைத்தான் தீனி போட்டு வளர்க்கிறார்கள். நாளை இது தொடர்பாக புகாரளிக்க இருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு வந்த 37 வருடத்தில் நான் இவ்வளவு கோபமாக பேசுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இதன் பிறகு நான் சும்மா இருக்க மாட்டேன். என்னை சீண்டி பார்க்காதீர்கள். தாங்க மாட்டீர்கள்" என்றார். செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோதே குஷ்பு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்கலங்கியபடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE