புதுச்சேரியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. பெரும்பாலான நாட்களில் 100 டிகிரியை தாண்டி வெயிலின் அளவு பதிவாகி வருகிறது.

மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இந்தச் சூழலில் புதுச்சேரி வில்லியனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர் என நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கல் குரல்’ பகுதியில் பாலசுந்தரம் என்ற வாசகர் புகார் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக விசாரித்தபோது பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்தனர். “கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பகல், இரவு நேரங்களில் மக்கள் கடும் அவதியடைகின்றனர். குறிப்பாக வில்லியனூர் கோட்டைமேடு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், உறுவையாறு, அரும்பார்த்தபுரம் போன்ற பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

நாள்தோறும் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை செய்யப்படுகிறது. 8 முறைக்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. இது கடந்த 3 தினங்களாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிலும் கைக் குழந்தைகளுடன் வசிப்பவர்களும், நோயாளிகளும் இந்த மின் தடை ஏற்படும் நேரத்தில் மிகவும் துன்பப்படுகின்றனர்.

கதவு, ஜன்னலை திறந்து வைத்து தூங்கினால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருள்களும் சேதமடைந்து வருகின்றன. சிறிய மாநிலமான புதுச்சேரியில் போதுமான அளவு மின்சாரம் உள்ளது. இருப்பினும் துணை மின்நிலையத்தில் உள்ள மின் உபகரணங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் இது போன்று மின்தடை ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினை சரி செய்ய வேண்டும்” என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். புதுச்சேரியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்து மின்துறை தரப்பில் விசாரித்தபோது, புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் ஏசி பயன்படுத்தப்படுகிறது. ஆகவே மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள மதிய நேரத்திலும், இரவிலும் கூடுதல் மின்சாரம் பயன்படுத்துவதால், துணை மின் நிலையத்தில் உள்ள உபகரணங்கள் அதிக சூடு ஏற்றப்படுவதால் மின்சாதனங்கள் பழுது ஏற்படுகின்றன. மின்சாதன பொருள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து வாங்க வேண்டும்.

பழுது ஏற்பட்டவுடன் சில பொருள்கள் உடனே கிடைப்பது இல்லை. இதன் காரணமாக சில தாமதங்கள் ஏற்படுகின்றன. மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இது போன்ற நேரத்தில் சில பகுதிகளுக்கு மின்சாரத்தை நிறுத்தி, சிறிது நேரத்துக்கு பிறகு மாற்றி கொடுக்கும் சூழல் வருகிறது. இதனால் கடந்த சில நாள்களாக மின்தடை ஏற்படுகிறது. இவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE