சென்னை: பெற்றோர் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதை மாணவர்கள் தடுக்க வேண்டும் என்று, அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய் அறிவுறுத்தினார்.
அகில இந்திய தளபதி விஜய்மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், 10, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கி, கவுரவிக்கும் விழா சென்னை நீலாங்கரையில் நேற்று நடைபெற்றது.
ரசிகர்கள் புடைசூழ அங்குவந்த நடிகர் விஜய், மேடையின் கீழ் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளி மாணவர்களிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் மற்றும் நிதியுதவி வழங்கினார்.
பின்னர், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: அண்மையில் வெளியான திரைப்படத்தில் இடம்பெற்ற "காடு இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். பணம் இருந்தால் பிடுங்கிக்கொள்வார்கள். ஆனால், படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது" என்ற வசனம் என்னை மிகவும் பாதித்தது. எனவே, மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டுமெனக் கருதினேன்.
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பட்டம் பெறுவது மட்டும் முழுமையான கல்வியாகிவிடாது. பள்ளியில் பயின்றதை மறந்த பிறகு, எது மிஞ்சி இருக்கிறதோ அதுதான் கல்வி என்று அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். அதை மனதில் கொள்ள வேண்டும்.
இதுவரை பெற்றோர் பாதுகாப்பில் இருந்தீர்கள். உயர் கல்விக்காக வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல நேரிடலாம். விடுதிகளில் தங்கிப் பயிலலாம். புதிய நண்பர்கள் கிடைக்கலாம். முதல்முறையாக தற்போது பெற்றோரின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து, புதிய வாழ்க்கைக்குள் செல்லப் போகிறீர்கள். அங்கு உங்களுக்கு கிடைக்கும் சுதந்திரத்தை சரியாகக் கையாள வேண்டும்.
பொய் தகவல்கள்...: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமூக ஊடகங்கள் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளன.அவற்றில் பெரும்பாலும் பொய் தகவல்கள்தான் பரவுகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். அதற்கு பாடப்புத்தகங்களைத் தாண்டி, பொதுஅறிவை வளர்க்கும் புத்தகங்களைப் படிக்க வேண்டும். பல்வேறு தலைவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக, அம்பேத்கர், பெரியார், காமராஜரைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது, நமது கையால், நமது கண்களையே குத்திக்கொள்வதைப் போன்றது. இதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
ஒரு வாக்குக்கு ரூ.1,000 கொடுத்தால்கூட, 1.5 லட்சம் வாக்குகளுக்கு ரூ.15 கோடி செலவளிக்க வேண்டியிருக்கும். அவ்வளவு செலவு செய்பவர், அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும்? எனவே, இதுகுறித்து எல்லாம் பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவியும், அவர்களின் பெற்றோரிடம் சென்று, "இனி பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள்" என்று சொல்லுங்கள். அது எப்போது நடக்கிறதோ, அப்போதுதான் இந்த கல்வி முறை முழுமையடைந்ததாக அர்த்தம். இவ்வாறு விஜய் பேசினார்.
அரசியலுக்கு வர வேண்டும்: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் சிலர் கூறும்போது, "அதிக மதிப்பெண் பெற்றதன் மூலம், நடிகர் விஜயை சந்திக்கவாய்ப்புக் கிடைத்ததை நினைத்து பெருமைப்படுகிறோம்" என்றனர். மேலும், விழாவில் பங்கேற்ற பெற்றோர்கள் சிலர் கூறும்போது, "இதுவரை யாரும் இதுபோன்ற முன்னெடுப்பை மேற்கொண்டதில்லை. விஜய் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும்" என்றனர்.
இந்த நிகழ்ச்சியில், விஜய் மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago