சென்னை: நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு, ஊக்கத்தொகை, பரிசு வழங்கும் விழாவை சென்னை - நீலாங்கரை பகுதியில் நடத்தி முடித்திருக்கிறார். இந்த நிகழ்வில் அவர் சில கருத்துகளை முன்வைத்துப் பேசினார். அதில் லேசாக தனது அரசியல் பார்வையையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதிலிருந்து நாம் சிலவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது.
விஜய் தனது பேச்சின் தொடக்கத்திலேயே கல்வியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் வகையில், ‘அசுரன்’ பட வசனத்தை மேற்கோள் காட்டியிருந்தார். தொடர்ந்து முழுமையான கல்வி குறித்து அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கருத்தையும் பகிர்ந்தார். அப்படியே குணாதிசய பண்பு குறித்துப் பேசிய அவர், சமகால தேர்தலில் மக்களின் வாக்களிக்கும் பங்கு குறித்தும் பேசினார். குறிப்பாக, வாக்கு செலுத்த பணம் பெறுவது கூடாது என்ற கருத்தை உறுதிபட முன்வைத்தார். இந்த மாற்றம் நிச்சயம் அடுத்த தலைமுறை வாக்காளர்கள் மத்தியல் அவசியம் நிகழ வேண்டும் என்பது அவர் பேசியதில் புரிந்துகொள்ள முடிந்தது.
அதோடு நிற்காமல் சமூகத்தில் சமநிலை வேண்டும் என உரக்கச் சொல்லிய அம்பேத்கர், தமிழக சமூக - அரசியலில் முன்னோடிகளாக திகழ்ந்த பெரியார் மற்றும் காமராஜர் குறித்தும் பேசியிருந்தார். இதை எப்படி சொல்லி இருந்தார் என்றால் ‘நாளைய தலைமுறையினராக உள்ள நீங்கள் தலைவர்கள் குறித்து அதிகம் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்’ என சொல்லியபோது இந்தத் தலைவர்களின் பெயர்களை விஜய் பகிர்ந்தார்.
இதன்மூலம் அவர் இடதுசாரி மற்றும் திராவிட அரசியலை முன்னெடுக்கிறாரா என்ற கேள்வியை எழச் செய்கிறது. ஏனெனில், சமூக சமத்துவத்தை ஆதரிப்பதுதான் கருத்தியல் ரீதியாக இடதுசாரி மற்றும் திராவிட அரசியல் இயக்கங்கள் முன்வைக்கும் நிலைப்பாடு. அதையே நடிகர் விஜயும் முன்வைக்கிறார். ஏனெனில், சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் திராவிட அரசியல் பேசும் கட்சிகள்தான் ஆட்சியில் இருந்து வருகின்றன.
அதைக் கூர்ந்து கவனித்துள்ள விஜய், அதே வரிசையில் தனது அரசியலை முன்னெடுக்க விரும்புவதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல் அவரது இலக்கு அடுத்து வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. மேலும், மாநில அரசியல்தான் இப்போதைக்கு அவர் டார்கெட்டாக இருக்கு வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை அவரது சமீபகால நலப்பணி திட்டங்கள் குறித்த அறிவிப்பிலும் நடவடிக்கைகளிலும் ‘தொகுதி வாரி’ என்ற சொல் தவறாமல் இடம்பெறுவது உறுதி செய்கிறது.
இதுநாள் வரை தனது படங்கள் மற்றும் திரைப்படம் சார்ந்த நிகழ்வுகளின்போது மட்டுமே அரசியல் பேசி வந்த விஜய், முதல் முறையாக தனது மக்கள் இயக்க நிகழ்வில் அதை பேசியுள்ளார். மறுபக்கம் தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலமாக மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் கவனித்து வருகிறார்.
அதேபோல், அரசியல் இயக்கத்தை கட்டமைப்பதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியை விஜய் பின்பற்றுவதையும் கவனிக்க முடிகிறது. பல்லாண்டுகளாக ரசிகர்கள் மன்றங்கள், ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலமாக ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கி, அதை அரசியல் கட்சியாக மாற்றியவர் விஜயகாந்த். அவர் வழியிலேயே ‘விஜய் மக்கள் இயக்கம்’ வளர்ந்து வருவதையும் கவனிக்கலாம்.
பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், தனது இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.
இதோ இப்போது பிரமாண்டமான நிகழ்வு மூலம் மாணவ, மாணவிகளுக்கு நேரில் ஊக்கத்தொகை வழங்கியிருப்பதும், அதில் பேசிய விதமும் 2026-ல் நடக்க உள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்பு தீவிர அரசியலுக்கு வர அவர் திட்டமிட்டுள்ளதற்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்க வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது.
அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது மட்டுமின்றி, அவர் அரசியலுக்கு வருவதை மிகத் தெளிவாக குறிப்பால் உணர்த்துகிறது. இந்தப் போக்கு அடுத்தடுத்து எப்படி முன்னெடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அவரது அரசியல் பயணம் இருக்கும். | வாசிக்க > ‘அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்’ - மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago