‘அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்’ - மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் விஜய் பேசுகையில், "வழக்கமாக நான் பட விழாக்களில் அதிகம் பேசி உள்ளேன். ஆனால், முதல் முறையாக இது போன்ற ஒரு நிகழ்வில் பேசுகிறேன். ஏதோ ஒரு பொறுப்புணர்ச்சி வந்தது போல உணர்கிறேன். வருங்கால இந்தியாவை சந்திப்பதில் சந்தோஷம். ‘உன்னில் என்னைக் காண்கிறேன்’ என்ற சொலவடை எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. உங்களில் நான் என்னைப் பார்க்கிறேன். எனது பள்ளி நாட்கள் என் கண் முன் வந்து போகிறது. நான் படிப்பில் சராசரி மாணவன் தான்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான். ‘காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது’. அது தான் அந்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம் தான் இது. ஆசிரியர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நான் எனக்குப் பிடித்த சில விஷயங்களை பகிர விரும்புகிறேன். பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள்.

பள்ளிக்குப் போவது, கல்லூரி போவது, பட்டம் பெறுவது மட்டும் முழுமையான கல்வி அல்ல என விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியுள்ளார். அதைக் கற்று, அதையெல்லம் மறந்து பிறகு எது எஞ்சியுள்ளதோ அது தான் கல்வி என அவர் சொல்லியுள்ளார். முதலில் அது புரியவில்லை. அப்புறம் போகப் போக புரிந்தது. நாம் கற்கும் கல்வியை கடந்து நம்மிடம் எஞ்சி இருப்பது நமதும் குணமும், சிந்திக்கும் திறனும் தான். இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் முழுமையான கல்வி அறிவை பெற முடியும்.

பணத்தை இழந்தால் அதில் இழப்பு ஏதும் இல்லை. ஆரோக்கியத்தை இழந்தால் ஏதோ ஒன்றை இழக்கிறோம். ஆனால், குணத்தை இழந்தால் அனைத்தையும் இழக்கிறோம். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இவ்வளவு நாள் வரை பெற்றோர் உடன் இருந்து வந்த நீங்கள், படிப்புக்காக வேறு இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். அந்த சுதந்திரத்தை கவனத்துடன் கையாள வேண்டும். நம்முடைய வாழ்க்கை நம் கையில தான் இருக்கிறது.

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் போலி செய்திகள் அதிகம் இருக்கின்றன. பரந்து விரிந்துள்ள சமூக வலைதளம் அதற்குக் காரணம். அதனால் சிந்திக்கும் திறன் நாம் கற்கும் கல்வியைக் கடந்தும் இருக்க வேண்டும். நிறைய படிங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்கலாம்.

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய மற்றும் நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்வு செய்யப் போகிறீர்கள். நமது விரலை வைத்து நமது கண்ணை குத்திக்கொள்ளும் பணியை நாம் செய்து கொண்டுள்ளோம். நான் எதைச் சொல்ல வருகிறேன் என்றால் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பது.

ஓட்டுக்கு காசு கொடுக்கும் அரசியலில் போட்டியிடும் நபர் குறித்து யோசித்துப் பாருங்கள். உங்கள் அப்பா, அம்மாவிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் எனச் சொல்லுங்கள். இது நடந்தால் உங்கள் கல்வி முறை முழுமை அடையும் என நான் நினைக்கிறேன். தோல்வி அடைந்த மாணவர்களுக்கு நீங்கள் ஊக்கம் கொடுங்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நீங்கள் நினைப்பதை முன்னெடுத்து செய்யுங்கள். முடியாது எனச் சொல்வார்கள். அதை கண்டு கொள்ளாதீர்கள்” எனக் கூறியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்