தமிழக பாஜக மாநிலச் செயலாளர் சூர்யா கைது: அண்ணாமலை கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எல்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில் சூர்யா கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக பாஜக மாநிலச் செயலாளர் சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.

விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.

கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE