செந்தில் பாலாஜி விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தலையிட முடியாது - முன்னாள் உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தலையிட முடியாது என்று ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்றுகூறியதாவது: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர், இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று செய்தியாளர்களிடம் கூறியதைப் பார்த்தேன்.

இந்த விவகாத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தலையிட அதிகாரமில்லை. எப்போதெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ, அப்போது மனித உரிமை ஆணையம் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக 1993-ம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 12-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த பிரச்சினையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் தலையிட விதிகள் பிரிவு 21, 5-இன் படி அதிகாரமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 7-வது அட்டவணையில் சொல்லப்பட்டுள்ள, மத்திய, மாநில பட்டியலின் கீழ் உள்ள அரசுத் துறை அதிகாரிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டால்தான் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகள் பொதுப் பட்டியலின் கீழ் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மட்டுமே தலையிட முடியும்.

மனித உரிமைகள் ஆணையத்தின் மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இதை கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE