ஜூன் 20-ல் ஆஜராக வேண்டும் - செந்தில் பாலாஜி தம்பிக்கு அமலாக்கத் துறை சம்மன்

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் வரும் 20-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர், சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லம், ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் அசோக்குமார் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, அபிராமபுரத்தில் உள்ள மற்றொரு குடியிருப்பு, கரூரில் செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் வீடுகள் உள்ளிட்ட வீடுகளிலும் அமலாக்கத் துறை சோதனை நடந்தது.

பின்னர், அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அசோக்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி, அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி தற்போது மருத்துவமனையில் இருப்பதால், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை விசாரணைக்கு அழைக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.

பண மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக வரும் 20-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அசோக்குமாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளதாகவும், அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பிறகு, வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் விசாரணைக்கு ஆஜராகி, விளக் கம் அளிக்க அமலாக்கத் துறை சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 5 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், நிலைமை சீராகும் வரை பாதுகாப்பு தொடரும் என்றும் சென்னை பெருநகர காவல் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE