சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை - மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும்,முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2021-ல் தமிழக காவல் துறை சிறப்பு டிஜிபி-யாக இருந்த ராஜேஷ் தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், ராஜேஷ் தாஸ், கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 2021 ஜூலை மாதம் விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், 1,000 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2021 ஜூலை தொடங்கிய வழக்கில் 139 முறை விசாரணை நடைபெற்றது. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர், முன்னாள் உள்துறைச் செயலர், சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையொட்டி, ராஜேஷ் தாஸ், கண்ணன் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அம்ஜத் அலி , வைத்தியநாதன், ரவிசந்திரன், கலா ஆகியோரும் ஆஜராயிருந்தனர்.

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்த நடுவர் புஷ்பராணி, பாலியல் துன்புறுத்தலுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அதேபோல, தமிழ்நாடு பெண்கள் தொல்லை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துதீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நடுவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண் எஸ்.பி.யைமுறையாகப் புகார் அளிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதற்காக, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இவ்வழக்கில் ஜாமீன் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர் தினகரன், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நடுவர் புஷ்பராணி, குற்றவியல் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் அளித்தும், அதுவரை ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE