எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்படும் 1 மரத்துக்கு 12 மரம் நட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் ஈடாக தலா 12 மரக்கன்றுகளை நட தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக பழமையான மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி, பசுமை தாயகம் அமைப்பின் செயலாளரான அருள், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பசுமைத் தாயகம் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, “144 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.734.91 கோடி செலவில் புணரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக 100 ஆண்டுகள் பழமையான 600-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி வருகின்றனர். சீரமைப்புக்காக மரங்களை வெட்டுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது” என வாதிட்டார்.

அப்போது தெற்கு ரயில்வே சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, “தமிழக அரசின் முன் அனுமதி பெற்றே மரங்கள் வெட்டப்படுகின்றன. இதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முழுமையாக பின்பற்றப்படும்” என்றார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார், “இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனம், பூங்கா, பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் அடங்கிய மாவட்ட பசுமைக்குழு உரிய பரிசீலனைகளை செய்தே, மரங்களை வெட்ட கடந்த மே 10-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. 103 மரங்கள் வேறோடு எடுக்கப்பட்டு, அவற்றை மாற்று இடத்தில் நடவும், 180 மரங்கள் வெட்டப்படுவதால் அதற்கு மாற்றாக ஒவ்வொரு மரத்துக்கும் தலா 12 மரக்கன்றுகள் வீதம் நட உத்தரவிட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் முறையாக நிறைவேற்றப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் ஈடாக தலா 12 மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற நிபந்தனையை தெற்கு ரயில்வே நிர்வாகம் முறையாக பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட பசுமை குழுவுக்கும், இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

அதேநேரத்தில் மாற்று இடத்தில் மரங்களை முறையாக நடவில்லை என்றால் உடனடியாக நீதிமன்றத்தை நாடலாம் என பசுமை தாயகம் அமைப்புக்கும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்