தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள்: மீன்களின் விலை குறைய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: மீன்பிடி தடைக் காலத்துக்கு பிறகு தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில்மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 545 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. தடைக்காலத்தில் 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல்போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

தடைக்காலம் முடிவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் தங்கள் படகுகளை கடலில் இயக்கி வெள்ளோட்டம் பார்த்தனர். படகுகளில் வலை, ஐஸ், டீசல் போன்ற தேவையான அனைத்து பொருட்களையும் ஏற்றி தயார் நிலையில் இருந்தனர். ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் ஜூன் 18-ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த போதிலும் நேற்றுமுன்தினம் கடலுக்கு செல்லமுடியாமல் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், பலத்த காற்றுஎச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்படாத போதிலும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 247 விசைப்படகுகள் நேற்று அதிகாலை 5 மணியளவில் புறப்பட்டு சென்றன. இதேபோல் வேம்பார், தருவைகுளம் பகுதிகளில் உள்ள விசைப்படகுகளும் நேற்று கடலுக்கு சென்றன.

காற்று எச்சரிக்கை நாளை (ஜூன் 18) வரை அமலில் இருந்தாலும், அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதால், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்களும் நேற்று காலை கடலுக்கு புறப்பட்டு சென்றனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதால், நல்ல மீன்பாடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மீன்களின் விலை குறையும் எனவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE