சேலம் | ஜலகண்டாபுரம் மண்டிகளில் இருந்து வாரம் 6 லட்சம் தேங்காய் வடமாநிலங்களுக்கு விற்பனை

By த.சக்திவேல்

மேட்டூர்: ஜலகண்டாபுரம் மண்டிகளில் இருந்து வாரந்தோறும் வடமாநிலங்களுக்கு 6 லட்சம் தேங்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகள் உள்ளன. இங்கு எடப்பாடி, நங்கவள்ளி, மேட்டூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதியில் இருந்து விளைச்சல் செய்யப்படும் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. முழு மட்டையுடன் மண்டிகளுக்கு வரப்படும் தேங்காய்களில், பாதியளவுக்கு நார் உரிக்கப்பட்டு, பின்னர், அவரை லாரிகளில் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. தற்போது, தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால், ஜலகண்டாபுரம் மண்டிகளில் இருந்து வட மாநிலங்களுக்கு அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து தேங்காய் மொத்த வியாபாரி சந்தோஷ் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி தொடங்கி தை மாதம் வரை குளிர்காலம் என்பதால் முற்றிய தேங்காய் மகசூல் கிடைக்க நாட்கள் அதிமாக இருக்கும். இதனால் 6 மாதங்கள் தேங்காய் மகசூல் குறைவு தான். மாசி தொடங்கி ஆனி மாதம் வரையிலான கோடை காலத்தில் முற்றிய தேங்காய் மகசூல் அதிகமாக கிடைக்கும். தற்போது, கடந்தாண்டை விட நடப்பாண்டில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் மண்டிகளுக்கு வரத்தும் அதிகளவில் உள்ளது.

ஜலகண்டாபுரம் மண்டிகளில் இருந்து குஜராத், மகாராஷ்டிரா, சண்டிகர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அதிகளவில் தேங்காய் அனுப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, 8 முதல் 10 லோடு (ஒரு லோடு 20 ஆயிரம் - 25 ஆயிரம் தேங்காய்) வரை அனுப்பட்டது. தற்போது, வரத்தும் அதிகரித்துள்ளதால், வாரந்தோறும் 25 முதல் 30 லோடு வரை அனுப்பட்டு வருகிறது. அதாவது, 6 லட்சம் தேங்காய் வரை அனுப்பப்டுகிறது.

குறிப்பாக, தேங்காய் உற்பத்தியும், தேவையை பொறுத்தும் தான் தேங்காய் அனுப்பட்டு வருகிறது. தற்போது, தேங்காய் மகசூல் அதிகரித்துள்ளதால் ஒரு தேங்காய் ரூ 9 விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டை காட்டிலும், விலை குறைவு தான். ஆனால், வடமாநிலங்களில் தேவை இருப்பதால், ஏற்றுமதி அதிகரித்துள்ளது சற்று ஆறுதலாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE