சனாதான தர்மம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துகள்: ஆர்டிஐ தகவல் கோரல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சனாதான தர்மம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தில் விவரங்கள் கோரிய விண்ணப்பத்தின் மீது 8 வாரங்களில் முடிவெடுக்க ஆளுநர் மாளிகை மேல்முறையீட்டு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொதுக் நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருவதாக கூறி, சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மனு அனுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக ஆளுநர் மாளிகை அலுவலகம், வழக்கறிஞர் எழுப்பிய கேள்விகள் தகவல் உரிமை சட்டத்தில் வராது என்றும், அதுதொடர்பாக தகவல்கள் தங்கள் செயலகத்தில் இல்லை என்றும் விளக்கம் அளித்த்திருந்தது.

இந்த பதிலை எதிர்த்து ஆளுநர் மாளிகையின் பொது தகவல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் அமைப்பில் உயரிய பதவியில் இருந்து கொண்டு தகவல் உரிமை சட்டத்தில் உரிய பதில் அளிக்க தயக்கம் காட்டுவதாகவும், சனாதான தர்மத்தைப் பற்றி பேசுவதன் அடிப்படை என்ன என்றும் தெரிவிக்க வேண்டுமென மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் துரைசாமியின் மேல்முறையீட்டு மனு மீது 8 வாரங்களில் முடிவெடுக்க ஆளுநர் மாளிகையின் பொது தகவல் மேல்முறையீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE