அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்; இலாகா மாற்றத்துக்கு மட்டும் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு கூடுதலாக ஒதுக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரவையில் செந்தில்பாலாஜி தொடர்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையான அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்து, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்து இருந்தார்.

அதில், அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் வகித்து வந்த மின்சாரத் துறையை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்க இருக்கிறோம் என முதல்வர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஆளுநர், முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் தவறாக வழிநடத்துவதாகவும், தவறானது எனவும் கூறி பதில் கடிதம் அனுப்பினார். மேலும், முதல்வரின் பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜியின் இலாகா மாற்ற விவகாரம் தொடர்பாக மீண்டும் ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின்படி, துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘முதல்வரின் பரிந்துரையின்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொண்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில்பாலாஜி, அமைச்சரவையில் தொடர்வதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்காமல் மோசடி செய்தது, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 13-ம் தேதி இரவு கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வரும் 28-ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று உயர் நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

அதேவேளையில், முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்காததால், ‘பாஜகவின் முகவராக ஆளுநர் செயல்படுகிறார் என்பது கடிதங்கள் மூலமாக தெரிகிறது. அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்படும் முதல்வராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஆனால் ஆளுநரோ அரசின் அதிகாரங்களில் தலையிடுகிறார்’ என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதன் விவரம்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்ற விவகாரம் - பொன்முடி தகவல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE