“மோடி மீண்டும் பிரதமராக மக்கள் விரும்புகின்றனர்” - மதுரை ஆதீனம் கருத்து

By செய்திப்பிரிவு

மதுரை: "பிரதமரின் தமிழ் உணர்வால், வரலாம். இலங்கைக்காக குரல் கொடுத்தார். இலங்கை தமிழர்களுக்கு வீடெல்லாம் கட்டிக் கொடுத்துள்ளார். எனவே மூன்றாவது முறையாக பிரதமராக வரலாம். அவர் பிரதமராக மீண்டும் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்" என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

மதுரை ஆதீன மடத்தில் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நான் மடத்துக்கு வந்து 45 வருடம் ஆகிவிட்டது. நான் ஏற்கெனவே குன்றக்குடி அடிகளாரிடம் இருந்துள்ளேன். இதற்கு முன்பு இருந்தவர். அவரைப்பற்றி உங்களுக்குத் தெரியும். உலகம் சுற்றியவர். அவரிடமெல்லாம் தயாரானவன் நான்.

அதேபோல், தருமபுரம் ஆதீனத்தில் ஒரு ஆறேழு வருடங்கள் இருந்தேன். திருவாவடுதுறை ஆதீனத்தில் 40 வருடங்கள் இருந்துள்ளேன். காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், ஆவுடையார்கோயில் என பல இடங்களில் இருந்துள்ளேன். தமிழகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன். எனது அனுபவத்தின் அடிப்படையில் நல்லவர், கெட்டவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றிவிடும்.

ஆதீன சொத்துகளை மீட்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதேபோல், மதுரை விமான நிலையம் அருகே 1090 ஏக்கரில் விவசாயப் பல்கலைக்கழகம் ஏற்படுத்த இருக்கிறோம். இதுதொடர்பாக பிரதமரிடம் மனு கொடுத்துள்ளோம். அதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு விவசாயப் பல்கலைக்கழகம் கொண்டுவரப் போகிறோம். பள்ளிக்கூடமும் ஆரம்பிக்கப் போகிறோம்" என்றார்.

அப்போது மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரமுடியுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "பிரதமரின் தமிழ் உணர்வால், வரலாம். இலங்கைக்காக குரல் கொடுத்தார். இலங்கை தமிழர்களுக்கு வீடெல்லாம் கட்டிக் கொடுத்துள்ளார். எனவே, மூன்றாவது முறையாக பிரதமராக வரலாம். அவர் பிரதமராக வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE