பாஜக வற்புறுத்தலால்தான் தமாகாவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடா? - ஆர்.எஸ்.பாரதிக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "மத்தியில் பாஜக மற்றும் தமிழகத்தில் அதிமுக, தமாகா கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமாகாவுக்கு மாநிலங்களவை உறுப்பினரை அதிமுக ஒதுக்கியது பாஜகவின் வற்புறுத்தலால் என்ற பொய்யான செய்தியை கூறியிருக்கிறார் திமுகவின் அமைப்புச் செயலாளர்" என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திமுகவின் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்தகால ஆட்சியில் கையூட்டு வாங்கிய குற்றச்சாட்டுக்காக அமலாக்கத் துறையினர் விசாரணை செய்து, சோதனை நடத்தி அதன் அடிப்படையில் அவர் கைதும் செய்யப்பட்டது சட்டத்துக்கு உட்பட்டதே. உடல்நலக் குறைவு என்று கூறி அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் செய்தி.

தவறு செய்பவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடிய, குற்றவாளிகளை நிரபராதி ஆக்கக்கூடிய கட்சியாக திமுக அரசு தொடர்ந்து பொய்யான, தவறான செய்திகளை கூறி மக்களை திசை திருப்ப நினைக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைக்கு திமுகவினுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேட்டி அமைந்துள்ளது. மத்தியில் பாஜக மற்றும் தமிழகத்தில் அதிமுக, தமாகா கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாநிலங்களவை தேர்தல் குறித்து குறிப்பாக தமாகாவுக்கு மாநிலங்களவை உறுப்பினரை அதிமுக ஒதுக்கியது பாஜகவின் வற்புறுத்தலால் என்ற பொய்யான செய்தியை கூறியிருக்கிறார் திமுகவின் அமைப்புச் செயலாளர்.

எந்தக் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அந்தக் கட்சியானது கூட்டணிக் கட்சிக்கு ஒத்த கருத்தோடு மாநிலங்களவை உறுப்பினரை ஒதுக்குவது தமிழக அரசியலில் புதிதல்ல. அந்த வகையில்தான் கூட்டணிக் கட்சியான தமாகாவுக்கு அதிமுகவானது மாநிலங்களவை உறுப்பினரை ஒதுக்கியது. அதைக்கூட தெரியாதவராக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது ஆச்சரியம்.

அப்படி என்றால் தொடர்ந்து திமுக கூட்டணியில் அவர்களின் கூட்டணிக் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினரை ஒதுக்கியது திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தின் பேரில் என்று எடுத்துக்கொள்ளலாமா? எனவே, சட்டத்தின் முன் ஆதாரங்களின் மூலம் கைது செய்யப்பட்ட ஓர் அமைச்சரை காப்பாற்றுவதற்காக திமுகவின் அமைப்புச் செயலாளர் பொய்யான செய்தியைச் சொல்லி உண்மையை மறைக்க முயற்சிப்பதும், மக்களை குழப்ப நினைப்பதும் தமிழக மக்களிடம் எடுபடாது.

எனவே, தமிழக திமுக ஆட்சியாளர்கள், உண்மை நிலையை மக்களிடம் எடுத்துக் கூறாமல், குற்றத்தை மறைக்க, தப்பிக்க நினைத்து ஏதேதோ பேசி, தவறான செய்தியை வெளியிட்டு மக்கள் மன்றத்தில் இருந்தும், வழக்கின் விசாரணையில் இருந்தும், சட்டத்தின் பிடியில் இருந்தும் தப்பிவிடலாம் என்றால், அது ஜனநாயகத்தில் எடுபடாது. நீதியும், நியாயமும், சட்டமும் வெல்ல வேண்டும் என்பதுதான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தங்கமணி, வேலுமணி மீதான ரெய்டு நடவடிக்கைகளின்போது அவர்களுக்காக டெல்லி சென்று அமித் ஷா காலில் விழுந்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும், தமாகாவுக்கு மாநிலங்களவை உறுப்பினரை அதிமுக ஒதுக்கியது பாஜகவின் வற்புறுத்தலால் என்றும் பேட்டி அளித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE