தஞ்சை | கரும்புக்கான முழுத்தொகையை வழங்க வலியுறுத்தி வருவாய், வேளாண் அலுவலர்கள் சிறைப்பிடிப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: பாபநாசம் வட்டம், திருமண்டக்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு 199 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக ஆதனூரில் கையெழுத்து வாங்கிய, வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களை விவசாயிகள் சிறைப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் 199-வது நாளான இன்றும்,அங்கு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வந்த, வருவாய் ஆய்வாளர் ராஜாதேவி மற்றும் வேளாண்மைத்துறை வேளாண் அலுவலர் நிவாஸ் ஆகிய 2 பேரும், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம், கருப்புக்கான தொகையைப் பெற்றுக்கொள்கின்றோம் எனப் பதிவிட்ட தாளில் கையெழுத்து வாங்கினர்.

இதனையறிந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், ஆதனூருக்கு சென்று கரும்புக்கான முழுத்தொகையையும் வழங்க வேண்டும், கையெழுத்து வாங்குவதற்கான ஆணையை வழங்க வேண்டும் என அவர்களை அலுவலகத்திலேயே சிறை பிடித்து முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போராட்டம் நடைபெற்றது. பின்னர், அரசு அலுவலர்கள் அந்த ஆணையை வழங்கிய பிறகு,நாளை கும்பகோணத்தில் 200-வது நாள் போராட்டம் நடைபெறும் என தற்காலிகமாக இந்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், கரும்புக்கான முழுத்தொகையை வழங்காமல், விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கினால், தொடர்ந்து அங்கு வரும் அரசு அலுவலர்களை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE