சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்டி, கிங் நிலையவளாகத்தில், ரூ.376 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை 6.03 லட்சம் சதுரடியில், 1000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு நவீன சிறப்பு வசதிகளை கொண்ட இந்த பல்நோக்கு மருத்துவமனையை நேற்று மாலை, மருத்துவர்கள், செவிலியர்கள்
உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன்பின், அந்த வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலை மற்றும் கல்வெட்டையும் திறந்து வைத்தார். மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பதினைந்தே மாதத்தில், இந்த மருத்துவமனையை கட்டியுள்ளோம். இதுதான் மிக முக்கியமான சாதனை. 2015-ம் ஆண்டு அறிவித்துவிட்டு, 2023-ம் ஆண்டு கூட, 2 -வது செங்கலை எடுத்து வைக்காத அலட்சியத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும் நிலையில், அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் கட்டிமுடித்துள்ளோம்.

மக்களுக்கு உண்மையான சேவை நோக்கத்தோடு திட்டங்களைத் தீட்டுபவர்களுக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டங்களை அறிவிப்பவர்களுக்குமான வேறுபாட்டை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

கருணாநிதி தனது வாழ்க்கை வரலாறான ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் பாகம் வெளியீட்டு விழா 1975-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுவதாக ஏற்பாடானது. முதல் பாகத்தை வெளியிட அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது, பெற்றுக்கொள்ள, ஆளுநர் கே.கே.ஷா வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். கடைசி நேரத்தில், இப்போது நடந்திருப்பதைப் போலவே, அப்போதும் குடியரசுத் தலைவரை வரவிடாமல் சிலர் தடுத்துவிட்டார்கள்.

தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகள் செய்ய நினைக்கும்போதெல்லாம் அதற்கு ஒரு இடைஞ்சலை ஏற்படுத்தி நம்மை திசை திருப்பி நன்மைகளைத் தடுக்கப் பார்ப்பார்கள். ஆனால் நாம் திசை திரும்ப மாட்டோம். மக்கள் நலன் ஒன்றே எனது இலக்கு என்ற நேர்வழியில் பயணிப்போம்.

வேலூரில் தங்கும் விடுதி: வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி போன்ற பல்வேறு பெரிய மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சிகிச்சை பெற தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் வருகின்றனர். இவர்களின் தங்குமிடம் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வேலூர் அருகே சத்துவாச்சாரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 எக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 250 படுக்கை வசதி கொண்ட ‘முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி ’கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி, பொதுப்பணி்த்துறை செயலர் பி.சந்திர மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE