செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மனு

By செய்திப்பிரிவு

சென்னை: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், பெஞ்சமின் ஆகியோர் நேற்று சந்தித்தனர். அப்போது, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் அவர்கள் வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது: இளைஞர்களை ஏமாற்றி, கோடிக்கணக்கில் பணம் பெற்று, குற்ற வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்கவேண்டும்.

கருணாநிதியே நீக்கியுள்ளார்: சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கைது கூட செய்யவில்லை. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். ஈரோடு என்கேகேபி ராஜா மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.

கடந்த 2011-ம் ஆண்டு வேளாண் துறை அதிகாரி ஒருவர், தனது தற்கொலைக்கு துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் காரணம் என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். அரசே வழக்கு பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் இருந்து விடுதலையான பிறகே, தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த கைது நடவடிக்கையில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை. அமலாக்கத் துறையும் தானாக எதுவும் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை கடந்த 2021 ஜூலையில் வழக்கு பதிவு செய்தது. கடந்த ஜூன் 14-ம் தேதி வரை அமலாக்கத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.30 ஆயிரம் கோடி முறைகேடு குற்றச்சாட்டு: வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரிடம் அதிமுக வழக்கறிஞர் ஆர்.எம்.பாபு முருகவேல் அளித்த புகார் மனுக்களில் கூறியிருப்பதாவது: முன்னாள் நிதி அமைச்சரும், இந்நாள் தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவலாக ஒரு ஆடியோ பகிரப்பட்டது. அதில் பழனிவேல் தியாகராஜன், முதல்வரின் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும் கடந்த ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடி முறைகேடாக பணம் ஈட்டி இருப்பதாக பேசப்பட்டிருந்தது. இந்த குரல் பதிவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே முகமைகளுக்கு நான் புகார் மனு அனுப்பி இருந்தேன். அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே இன்று மீண்டும் வருமானவரித் துறைக்கும், அமலாக்கத் துறைக்கும், காவல்துறை தலைமை இயக்குநருக்கும் உடனடி நடவடிக்கை கோரி மனு அளித்திருக்கிறேன். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE