தலைமை பொறுப்புகளில் பெண்கள் அதிகம் இருந்தால்தான் சமூக மாற்றம் ஏற்படும் - ஸ்மிருதி இரானி கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: பொருளாதாரப் பிரிவுக்கான தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் அதிகம் இருந்தால் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதால், நாடு முழுவதும் 50 நகரங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே சென்னையில் கல்வி மற்றும் நிதிப் பணிக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், ஜி-20 நாடுகளின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்கும் 'டபிள்யு-20’ என்ற மகளிர் உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. மத்திய மகளிர் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசியதாவது: `டபிள்யு-20' கருத்துரு அறிக்கை பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. உலகை அச்சுறுத்
தும் பருவநிலை மாற்றத்துக்கு மத்தியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகளை வலியுறுத்துவது அவசியமாகும்.

2018-ல் பருவநிலை மாற்றத்தால் இடம்பெயர்ந்தவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. குறிப்பாக, போதிய சுகாதார சேவைகள் இல்லாத பகுதிகளில், பெண்களும், குழந்தைகளும் பருவநிலை மாற்றத்தால் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பாலினப் பாகுபாடு இருக்கக்கூடாது. இதற்கான கலந்துரையாடல்களை அதிகரிக்க வேண்டியது அவசியம். நம்மிடம் பெண்களுக்கென 30 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான கட்டமைப்பு உள்ளது. மேலும், தொழில்நுட்பத்தை அணுகுவதில் மொழி தடையை தகர்க்க வேண்டும்.
பொருளாதாரப் பிரிவுக்கான தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் அதிக அளவில் இருந்தால் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற் படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

ஜி-20 மாநாட்டு தலைவர் அமிதாப் காந்த் பேசும்போது, ‘‘இந்தியாவில் மகளிர் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இவற்றில் 80 சதவீத வீடுகள் பெண்களின் பெயர்களில்தான் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 10 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 11 கோடி கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

எளிய மக்கள் சுய வேலைவாய்ப்பை முன்னெடுக்கும் வகையில் முத்ரா கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் 70 சதவீதம் பெண்கள் பயனடைந்துள்ளனர். அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைக்கும் வகையில், அவர்களது செயல்பாடுகளை ஆண்கள் ஊக்குவிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மகளிர் உச்சி மாநாட்டு தலைவர் சந்தியா புரெச்சா, ஐ.நா. அமைப்புக்கான இந்திய ஒருங்கிணைப்பாளர் ஜோம்பி சார்ப், பாஜக மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE