மெட்ரோ முறைகேட்டை விசாரித்தால் முதல்வர் ஸ்டாலின் சிறை செல்வது உறுதி - மதுரையில் அண்ணாமலை பேட்டி

By கி.மகாராஜன் 


மதுரை: சென்னை மெட்ரோ முறைகேடு புகாரை சிபிஐ விசாரித்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறைக்கு செல்வது உறுதி. அதற்கு பயந்து தான் சிபிஐக்கு வழங்கப்பட்ட பொது அனுமதியை திரும்ப பெற்றுள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரையில் பாஜக மையக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பாஜகவினருக்கு முதல்வர் நேரடியாக மிரட்டல் விடுத்ததாக நான் பார்க்கிறேன். செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமலாக்கத்துறை வழக்கை விசாரித்து கைது செய்துள்ளது.

இந்த கைதுக்கு பிறகு முதல்வரின் நடவடிக்கை சரியாக இல்லை. மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுகிறார். கனிமொழி கைது செய்யப்பட்ட போது கூட முதல்வர் இப்படி கோபப்பட்டதில்லை. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு இவ்வளவு கோபப்படுகிறார் என்றால் திமுகவின் கருவூலம் செந்தில்பாலாஜி தான் என பொதுமக்கள் பேசுவது உண்மைபோல் தெரிகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் நேர்மையாக வேலை செய்கின்றனர். முதல்வர் தான் நேர்மையாக இல்லை. சிபிஐக்கு வழங்கிய பொது அனுமதியை தமிழக அரசு இப்போது திரும்ப பெற்றுள்ளது. ரூ.200 கோடி சென்னை மெட்ரோ முறைகேடு தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சிபிஐயில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை சிபிஐ விசாரித்தால் மு.க.ஸ்டாலின் சிறை செல்வது உறுதி. இதனால் சிபிஐக்கு வழங்கப்பட்ட பொது அனுமதியை திரும்ப பெற்றுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது சட்டப்படி ஆட்சி நடைபெறவில்லை என்பது முதல்வரின் பேச்சு மூலம் உறுதியாகியுள்ளது. முதல்வரின் நேரடி மிரட்டல் காரணமாக திமுகவினரின் கோபம் பாஜகவினர் மீது திரும்பியுள்ளது. பாஜகவினர் எதற்கும் தயாராக இருக்கிறார்கள். முதல்வரின் சவாலுக்கு எதிர் சவால் விடுகிறேன். பாஜகவினர் மீது கை வைத்து பார்க்கட்டும், அப்புறம் பார்க்கலாம். பாஜகவினர் வீதிக்கு வர வேண்டாம், மாநில அரசு அலுவலகங்களை முற்றுகையிட வேண்டாம் என நினைக்கிறோம். நிலைமை கை மீறி போனால் கோட்டைக்கு வருவோம் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

மத்திய புலனாய்வுத்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை. அதற்காக பாஜகவினரை அச்சுறுத்த நினைத்தால், இது பழைய பாஜக இல்லை. திருப்பி கொடுப்போம் என தெரிவிக்கிறேன். சிறை நிரப்பவும் தயாராக இருக்கிறோம். இதே செந்தில்பாலாஜி மீது 7 ஆண்டுக்கு முன்பு குளித்தலையில் பேசும் போது முதல்வரே குற்றம்சாட்டினார். இப்போது செந்தில்பாலாஜி நல்லவர் போல் தெரிவது எப்படி? இந்த கைதை முதல்வர் திசை திருப்பக்கூடாது. கைது காலத்தின் கட்டாயம். செந்தில்பாலாஜி மீது உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்த 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அப்போது முதல்வர் என்ன செய்வார்.

உண்மையில் முதல்வர் பாஜகவினர் மீது கோப்படக்கூடாது. தவறு செய்த அமைச்சர்கள் மீது தான் கோபப்பட வேண்டும். செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் தாக்கியதாக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். அரசு ஊழியர்களை கட்சித் தொண்டர்களாக மாற்றுவது திமுகவின் மோசமான செயல்பாடு. அரசு பணியில் இருப்பவர்கள் நடுநிலையுடன் இருக்க வேண்டும். செந்தில்பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற பெண் ஐஆர்எஸ் அதிகாரி தாக்கப்பட்டார். அதை முதல்வர் கண்டிக்கவில்லை. ஐஆர்எஸ் அதிகாரிகள் எப்படி அமைச்சரை தாக்குவார்கள்.

இந்தியாவில் எதிர்கட்சிகள் இணைந்தால் பாஜகவுக்கு தான் லாபம். எம்பி தேர்தலில் 450 சீட்டுகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். ஆனால் எதிர்கட்சிகள் ஒன்றிணையாது. கொள்கை வேறுபாடுகள் உள்ளன. அதிமுகவினர் கருத்துகளுக்கு விரிவாக பதிலளித்துவிட்டேன்.

அதிமுக, பாஜக பிரிந்து போட்டியிட்டால் ஓட்டுகள் பிரியும் என முதல்வர் கணக்கு போடுகிறார். அது நடக்காது. மக்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால் ஒரு இடத்தில் கூட திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறாது. திமுகவின் எதிர்ப்பு வாக்குகள், கூட்டணி வாக்குகளால் பாஜக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும்.

செந்தில்பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது திமுகவின் திராவிட மாடல் தோல்வியடைந்ததை காட்டுகிறது. டி.ஆர்.பாலு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆவணங்களுடன் நேரில் ஆஜராவேன்." இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE