வேலூரில் 'கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி' கட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: "வேலூர் அருகே சத்துவாச்சாரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 ஹெக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 250 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 15) சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 1000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "2015ம் ஆண்டு அறிவித்துவிட்டு 2023ம் ஆண்டுவரை இரண்டாவது செங்கல்லைக்கூட எடுத்து வைக்காத அலட்சியத்தோடு ஒரு செங்கல் கதை உங்களுக்கு தெரியும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும் நிலையில், அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் இந்த மாபெரும் மருத்துவமனையை நாம் கட்டி எழுப்பி இருக்கிறோம்.

மக்களுக்கு உண்மையான சேவை நோக்கத்தோடு திட்டங்களைத் தீட்டுபவர்களுக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டங்களை அறிவிப்பவர்களுக்குமான வேறுபாட்டை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.2021ம் ஆண்டு மே 7ம் நாள் திமுக அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. ஜூன் 3 அன்று மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திமுக அரசு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் மிக முக்கியமானது, தென்சென்னையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்பதாகும்.

மருத்துவமனைக்கான 4.89 ஏக்கர் நிலம் சென்னை கிண்டி, கிங் மருத்துவ வளாகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. 500 படுக்கைகள் என்ற எண்ணிக்கையை பின்னர் ஆயிரம் என உயர்த்தினோம். 2022, மார்ச் 21 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இது 2023 ஜூன் மாதம். அதாவது மொத்தம் 15 மாதத்திற்குள் இந்த மருத்துவமனை கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் கருணாநிதி, தனது வாழ்க்கை வரலாறாக ‘நெஞ்சுக்கு நீதி’ எழுதினார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நெஞ்சுக்கு நீதியின் முதல் பாகம் வெளியீட்டு விழா 1975ம் ஆண்டு ஜனவரி 12ம் நாள் கலைவாணர் அரங்கில் நடப்பதாக ஏற்பாடு ஆனது. முதல் பாகத்தை வெளியிட அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அமகது ஒப்புக்கொண்டிருந்தார். நூலைப் பெற்றுக்கொள்ள அன்றைய தமிழக ஆளுநர் கே.கே.ஷா வருவதாக ஒப்புக்கொண்டார்கள். கடைசி நேரத்தில், இதோ இப்போது நடந்திருப்பதைப் போலவே, அப்போதும் குடியரசுத் தலைவரை வரவிடாமல் சிலர் தடுத்துவிட்டார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

விழாவை கருணாநிதி எப்படி நடத்தினார் தெரியுமா? நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தின் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்தவர் கண்ணொளி அற்றவரும் தமிழக விழி இழந்தோர் சங்கத் தலைவருமான ஆசீர் நல்லதம்பி, அவர்தான் தலைமை வகித்தார். நூலை வெளியிட்டவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவரும் தொழு நோயாளிகள் மறுவாழ்வு சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவருமான கவிஞர் முகமது அலி. நூலை பெற்றுக் கொண்டவர் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான செல்வி சாந்தகுமாரி. சக்கர நாற்காலியில் மேடைக்கு வந்து நூலை பெற்றுக் கொண்டார் சாந்தகுமாரி. இத்தகைய ஏழைப் பங்காளர்தான் நம்முடைய தலைவர் கருணாநிதி.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1 கோடியே 46 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளார்கள். தேசிய நல திட்டங்களை செயல்படுத்துவதில் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இப்படி மக்கள் நல அரசாக மக்களைக் காக்கும் அரசாக மக்கள் நல்வாழ்வு அரசாக தலைவர் கருணாநிதியின் வழியில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் கருணாநிதியும் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றினார். அவர் வழியில் நாங்களும் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்.

தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகள் செய்ய நினைக்கும்போதெல்லாம் அதற்கு ஒரு இடைஞ்சலை ஏற்படுத்தி நம்மை திசை திருப்பி நன்மைகளைத் தடுக்கப் பார்ப்பார்கள். அதற்காக டைவர்ட் ஆக மாட்டோம். மக்கள் நலன் ஒன்றே எனது இலக்கு என்ற நேர்வழியில் பயணிப்போம்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இன்னும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இதை சொன்னால் நமது நீர்வளத் துறை அமைச்சருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர் பலமுறை இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் சிஎம்சி போன்ற பல்வேறு பெரிய மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் வருகிறார்கள். இவர்களில் பொருளாதார ரீதியாக அதிக வசதியில்லாத பலரும் சிகிச்சைக்காக வருவதாலும் அவர்களுடன் வருபவர்கள் வேலூரில் தங்குவதற்கு, குறைந்த கட்டணத்தில் அறைகள் வாடகைக்கு கிடைப்பதில்லை என்பது அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டுவரப்பட்டது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மனிதநேய பண்பாட்டு விழுமியத்தினை கடைபிடிக்கும் நமது அரசு, இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வேலூர் அருகே சத்துவாச்சாரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 எக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 250 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திராவிட மாடல் அரசின் அங்கங்களாக உள்ள எங்கள் அனைவரையும் இன்றும் இயக்கிக் கொண்டிருக்கும் இயங்கு சக்தியாக தலைவர் கருணாநிதிதான் இருக்கிறார். அவர் பெயரை உச்சரிக்கும் போதே ஓராயிரம் மடங்கு பலம் பெறுகிறோம். அந்த பலத்தில் எங்களது பயணத்தைத் தொடர்வோம்" என்று முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE