அமலாக்கத் துறையினர் இழுத்துச் சென்று தாக்கியதாக செந்தில்பாலாஜி கூறினார்: மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்

By செய்திப்பிரிவு

சென்னை: அமலாக்கத் துறையினர் தன்னை தர தரவென்று தரையில் இழுத்து சென்றதாகவும், தாக்கியதாகவும் செந்தில்பாலாஜி கூறியதாக மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.

அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை நேற்று (ஜூன் 14) கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம்தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை மேற்கொண்டது. செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் வந்து, கைது விவகாரத்தில் விதிமீறல் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும், அமைச்சர் செந்தில்பாலாஜியை நேரில் சந்தித்து சிகிச்சை விவரம் மற்றும் அமலாக்கத்துறை நடந்து கொண்ட விதம் குறித்து கேட்டறிகிறார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமைச்சர் செந்தில்பாலாஜி சோர்வாக காணப்பட்டார். கைது செய்யப்பட்டபோது கடுமையாக நடத்தப்பட்டதாகவும், தர தரவென்று தரையில் போட்டு இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.தனக்கு இருக்கக்கூடிய இதய நோய் குறித்து கூறினார். தன்னைத் துன்புறுத்திய அதிகாரிகளின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகள் தாக்கியதாகவும் கூறினார். புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE