செந்தில்பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: நீதிமன்றக் காவலில் இருப்பதால் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினர் நேற்று கைதுசெய்தனர். அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை உறுதிசெய்த மருத்துவக் குழுவினர், அவரின் இதய ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளைக் கண்டறிய அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனையை செய்தனர். இதில், 3 பிரதான ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்கள் 4 பேர் வந்து, அவரது உடல் நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். மேலும், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜியை அனுமதித்து, இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை செந்தில்பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர்பாபு, கொறடா கோவி செழியன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,"நீதிமன்றக் காவலில் இருப்பதால் செந்தில்பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால், அவரை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. அதனால் மருத்துவர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தேன். உடனடியாக செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அவரது உறவினர்களை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தோம்."இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE