17 மணி நேர சோதனைக்கு பிறகு செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத் துறை - பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரை

By செய்திப்பிரிவு

சென்னை: அமலாக்கத் துறை அதிகாரிகள் 17 மணி நேர சோதனைக்கு பிறகு, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், உடனடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் கண்டறியப்பட்டதால், பைபாஸ் அறுவை சிகிச்சைக்குமருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2011-2015 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களை சேகரித்து வைத்திருந்தது. இதுதொடர்பான வழக்கை எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்து விட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை தொடக்கத்தில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டது. சிறப்பு விசாரணை குழு அமைத்து, செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதிகள் கடந்த மாதம் உத்தரவிட்டனர்.

செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த மே 26-ம் தேதிமுதல் ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை அடையாறு பசுமைவழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் சோதனை நடத்தினர். அப்போது, நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்த செந்தில் பாலாஜி, தகவல் அறிந்து பாதியில் வீடு திரும்பினார். அவரது முன்னிலையில் வீடு முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடைபெற்றது. காலையில் தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. குளிக்கவோ, உடை மாற்றவோ அவரை அதிகாரிகள் அனுமதிக்காததால், நடைபயிற்சிக்கு சென்ற உடையிலேயே செந்தில்பாலாஜி இருந்துள்ளார்.

நள்ளிரவு 1 மணி அளவில் சோதனை முடியும் சமயத்தில், அமலாக்கத் துறை உயர் அதிகாரிகள் அங்கு வந்தனர். விசாரணைக்கு அவரை அழைத்துச் செல்ல வந்துள்ளதாக கூறியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,செந்தில் பாலாஜி பலமாக குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், வெளியே நின்றிருந்த திமுகவினர், ஆதரவாளர்கள் பதற்றம் அடைந்தனர். எந்நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானதால், திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. தலைமையில் வழக்கறிஞர்களும், தொண்டர்களும் திரண்டு, செந்தில் பாலாஜியை சந்திக்க முயன்றனர். ஆனால், பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், யாரையும் அனுமதிக்கவில்லை.

ஆதாரம் அடிப்படையில் கைது: இந்நிலையில், 1.30 மணி அளவில் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, முக்கிய குற்றம் புரிந்ததற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில், அவரை கைது செய்ததாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 2 மணி அளவில் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் காரில் ஏற்றி அழைத்துக் கொண்டு, நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு புறப்பட்டனர்.

அப்போது, செந்தில் பாலாஜி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி, நெஞ்சை பிடித்துக்கொண்டு கதறினார். இதையடுத்து, அவரை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றனர். வலியால் துடிதுடித்த அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர்.

இஎஸ்ஐ மருத்துவர்கள் வருகை: பின்னர், தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதில், 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்குவிரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவமனை பரிந்துரை செய்தது.

செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதனை செய்ய, டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் வருவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்கள் 4 பேர் மருத்துவமனைக்கு வந்தனர். ஆஞ்சியோகிராம் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய அவர்களும் பரிந்துரை செய்துள்ளனர்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் நுழைவுவாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் விரைவு அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்து செந்தில்பாலாஜியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவும் வந்து பார்த்தார். ஆனால், சில எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகளை உள்ளே அனுமதிக்க வீரர்கள் மறுத்துவிட்டனர்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும் சூழல் இல்லாததால், சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு வந்தார். இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும் விசாரணை நடத்தினார். பின்னர், அவரை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்