சிபிஐக்கான விசாரணை அனுமதியை திரும்ப பெற்றது தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் முன்அனுமதியின்றி விசாரணை நடத்த சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.

இதுகுறித்து தமிழக உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன்அனுமதியை பெற வேண்டும் என டெல்லி சிறப்பு காவலர் அமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1989 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் சிலவகை வழக்குகளுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த பொதுவான முன்அனுமதியை தமிழக அரசு நேற்று திரும்ப பெற்று உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை இனி தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வற்கு முன்னதாக தமிழக அரசின் முன்அனுமதியை பெற்று விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற உத்தரவை ஏற்கெனவே மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE