செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் - அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை திருவேற்காட்டில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துகொண்டார்.

பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இது இப்போது நடந்த வழக்கு இல்லை. செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றது தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, அவரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் 6 ஆயிரம் மதுக்கூடங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக அவற்றுக்கு டெண்டர் விடவில்லை. அவை முறைகேடாக இயங்கி வருகின்றன. முறைகேடாக இயங்கிய மதுக்கூடங்கள், அவற்றில் விற்கப்பட்ட போலி மதுபானங்கள், ஆலைகளில் இருந்து நேரடியாக கலால் வரி விதிக்காமல் மதுக்கூடங்களில் மது விற்கப்பட்டது, அதன்மூலம் ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.100 கிடைத்தது என 2 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 உயர்த்தி விற்றுள்ளனர். முதல்வர் குடும்பத்துக்கு இப்படி பல கோடி ரூபாய் சென்றதாக செய்திகள் வந்துள்ளன.

தலைமைச் செயலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, ‘தமிழகத்துக்கு தலைகுனிவு’ என்றார் ஸ்டாலின். இப்போது, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அறையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி இருப்பதுதான் தமிழகத்துக்கே தலைகுனிவு.

எந்த ஆவணங்களை கைப்பற்றினாலும், அதற்கு விளக்கம் தருவேன் என்று கூறிய செந்தில்பாலாஜி, விளக்கத்தை தந்துவிட்டு செல்ல வேண்டியதுதானே. எதற்கு இந்த ஆர்ப்பாட்டம். கைது நடவடிக்கையால் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்று கருதியே செந்தில்பாலாஜி இந்த நாடகத்தை நடத்துகிறார்.

செந்தில்பாலாஜி கைது, மனித உரிமை மீறல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தலில் கள்ள ஓட்டு போட்ட திமுகவினரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மாற்று உடை உடுத்தவும், தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்காமல், 2 மணி நேரத்துக்கு மேல் வாகனத்தில் வைத்து மாநகரை சுற்ற வைத்தவர்களுக்கு மனித உரிமை குறித்து பேச தகுதி இல்லை.

செந்தில்பாலாஜி வாய் திறந்துஏதாவது கூறிவிட்டால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில்தான் முதல்வரும், அமைச்சர்களும் இன்று பதறிப்போய், ஓடோடி சென்று செந்தில்பாலாஜியை பார்க்கின்றனர். தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது, “2015-ல் தனிப்பட்ட முறையில் ஊழல் புகாரில் சிக்கிய செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். 2018-ல் பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் செந்தில்பாலாஜி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த கைது நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் நிகழ்வாக பார்க்க கூடாது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் தலையிட்டு பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE