பழநி ஆர்டிஓ அலுவலகத்தில் காத்திருப்போருக்கு தொலைக்காட்சி மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொலைக்காட்சி மூலம் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நாள்தோறும் வாகன உரிமம் பெறுதல், புதுப்பித்தல் மற்றும் பெயர் மாற்றம், புதிய வாகனங்களுக்கு எப்சி, வாகன எண் பெறுதல் உள்ளிட்ட சேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு வரும் மக்களுக்கு அவர்கள் காத்திருக்கும் நேரத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்டிஓ ஜெயகவுரி திட்டமிட்டார்.

இதற்காக, அலுவலகத்தில் தொலைக்காட்சி பொருத்தி அதில் மது போதையில் வாகனங்களை ஓட்டுவது, சீட் பெல்ட், தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள், விபத்துக்கான காரணம், விபத்து நிகழாமல் இருக்க சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு வீடியோக்கள், விபத்து தொடர்பான வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த விழிப்புணர்வு வீடியோ வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து ஆர்டிஓ ஜெயகவுரி கூறுகையில், "விபத்துக்களை தடுக்கவும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாள்தோறும் வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் மக்கள் தாங்கள் காத்திருக்கும் நேரத்தில் விழிப்புணர்வு வீடியோக்களை பார்த்து பயனடையலாம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE