டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் ஜூன் 16 ம் தேதி தண்ணீர் திறப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் ஜூன் 16 -ம் தேதி காலை தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி காலை திறந்து வைத்தார். அணையிலிருந்து தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை நிலவரப்படி, கரூர் மாவட்டம், மாயனூரைக் கடந்து முக்கொம்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. கல்லணைக்குக் காவிரி நீர் இன்று இரவு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காகக் கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் ஜூன் 16 -ம் தேதி காலை 9.30 மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.

இதில் டெல்டா மாவட்டத்துக்கு உட்பட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கவுள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE