சென்னை: "அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்திருப்பது உண்மையில் முதல்வர் ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட 'செக்மேட்' ஆகும்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்திருப்பது சட்டபூர்வமான நடவடிக்கை என சொல்லப்பட்டாலும் அது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே ஆகும். பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்திய கூட்டரசின் வாடிக்கையாகவுள்ளது. இதன்மூலம் தமிழகத்திலும் தமது தேர்தல் அரசியலுக்கான சித்து விளையாட்டைத் தொடங்கியுள்ளனர் என்பதே இயல்நிலை உண்மையாகும்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தன் மீதான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். எனினும், அவரை மணி கணக்கில் தனிமைப்படுத்தி அவருக்கு நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பதும் நள்ளிரவுக்கு மேல் கைது செய்திருப்பதும் சட்டப்படியான அணுகுமுறையென எவ்வாறு ஏற்க முடியும்? மோடி அரசின் ஏவலின்படியே அமலாக்கத் துறையினர் அவரை அச்சுறுத்தி ஆழமான உளவியல் வதையை மேற்கொண்டுள்ளனர் என அறிய முடிகிறது. எனவே, இது பாஜக அரசு தம்மைப் பகைத்துக்கொள்ளும் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவதற்காக கையாளும் ஓர் அரசியல் உத்தியே ஆகும். இப்போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்திருப்பது உண்மையில் முதல்வருக்கு வைக்கப்பட்ட 'செக்மேட் ' ஆகும். தமிழக முதல்வர் வெளிப்படையாக பாஜக மற்றும் சங்பரிவார்களின் 'சனாதன- இந்துத்துவத்தை'க் கடுமையாக எதிர்த்து வருகிறார். குறிப்பாக, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு அகில இந்திய அளவில் வியூகங்களை அமைத்து வருகிறார். ஜூன் 23 அன்று பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஒருங்கிணைப்பில் பாட்னாவில் நடைபெறவுள்ள பாஜக எதிர்ப்பு அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டத்திலும் தமிழக முதல்வர் பங்கேற்கவிருக்கிறார். இதனால் அச்சத்திற்கும் எரிச்சலுக்கும் ஆளாகியுள்ள சங்பரிவார் ஆட்சியாளர்கள் திமுக அரசுக்கு திட்டமிட்டே நெருக்கடியை உருவாக்குகின்றனர்.
» பாஜகவின் மதவெறி அரசியலை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: செந்தில்பாலாஜி கைதுக்கு டி.ராஜா கண்டனம்
» 'பல கோப்பை தேநீர் குடித்து விழித்திருந்தேன்' - ஐபிஎல் இறுதிப் போட்டி அனுபவம் பகிரும் கான்வே
மேலும், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பாஜகவின் வளர்ச்சிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மிகப்பெரும் தடையாக இருக்கிறார் என்பதுவும் சங்பரிவார்களின் ஆத்திரத்திற்கு காரணமாகும். அத்துடன், முதல்வருக்கு உறுதுணையாகவுள்ள அமைச்சர்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் என்பதால், இத்தகைய நெருக்கடிகளின் மூலம் நாடாளுமன்றத் தேர்தலின்போது அவரை முடக்கிவிட முடியுமென்றும் பாஜக கணக்குப் போடுகிறது. எனவே, இது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்கிற தோற்றத்தை உருவாக்கினாலும், அடிப்படையில் திமுகவை நிலைகுலைய வைப்பதற்கான ஒரு தேர்தல் உத்தியே என்பதுதான் உண்மைநிலை ஆகும்.
திமுகவை மட்டுமின்றி ஆம்ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா, பாரத் ராஷ்ட்ரிய சமிதி, ராஷ்ட்ரிய ஜனதா தள் போன்ற பல்வேறு எதிர்க் கட்சிகளையும் அமலாக்கத்துறை, மைய புலனாய்வுத்துறை, வருமானவரி துறை போன்ற விசாரணை நிறுவனங்களை ஏவி சட்டப்படியான நடவடிக்கைகள் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி அச்சுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் தற்போது அவர்களின் 'தாமரை நடவடிக்கை' என்னும் அரசியல் திருவிளையாடலை ஆரம்பித்துள்ளனர். எனினும், திமுக அரசு இதனை அஞ்சாமல் எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே ஆகும். வரும் ஜூன் 16 அன்று கோவையில் அனைத்துத் தோழமை கட்சிகளும் பங்கேற்கும் கண்டனப் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அனைத்துத் தோழமை கட்சிகளும் இதில் பங்கேற்கிறோம்.
மேலும், சனாதன - சங்பரிவார்களை அம்பலப்படுத்தும் திமுகவின் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள்கட்சி துணை நிற்கும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிலையில், தமிழகத்தைக் குறிவைத்து காய்களை நகர்த்தும் சனாதன- இந்துத்துவக் கும்பலின் அடாவடி அரசியலுக்கு ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எச்சரிக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago