சென்னை: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரது துறைகளை மற்ற அமைச்சர்களிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மற்றும் கரூரில் உள்ள மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜியை 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் சென்னை - ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். இதன் காரணமாக, மீண்டும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 மே 7-ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, சிவசங்கருக்கு மாற்றப்பட்டது. பிறகு, அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள் அளிக்கப்பட்டன. அதேநேரம், கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இது தவிர, வீட்டுவசதி துறையில் இருந்து சிஎம்டிஏ பிரிக்கப்பட்டு, அறநிலைய துறைஅமைச்சர் சேகர்பாபுவிடம் தரப்பட்டது.
» செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னிச்சையான நடவடிக்கை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
» மத்திய அரசின் கீழ்த்தரமான நடவடிக்கை: செந்தில்பாலாஜி கைதுக்கு வேல்முருகன் கண்டனம்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், அமைச்சரவையில் கடந்த மே மாதம் 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். மேலும், அமைச்சர்களின் பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
டிஆர்பி.ராஜாவுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்து வந்த தொழில் துறை ஒதுக்கப்பட்டது. பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கவனித்து வந்த நிதி, திட்டம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள், புள்ளியியல் ஆகிய துறைகள் தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டன. மேலும், தொல்லியல் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டது.
அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆட்சி மொழித் துறை ஆகியவை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் த.மனோ தங்கராஜ் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் கவனித்து வந்த பால்வளத் துறை மனோ தங்கராஜுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அமலாகத் துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள காரணத்தால், 4-வது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரது துறைகள் மற்ற அமைச்சர்களிடம் வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆகிய துறைகள் உள்ளன. இவற்றில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் ஐ.பெரிசாமிக்கும், மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாட்டுதுறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago