செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னிச்சையான நடவடிக்கை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “அமலாக்கத் துறை தன்னிச்சையான அமைப்பாகும். எந்தத் தூண்டுதல் பேரிலும் அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடக்கவில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் வகையில் புதுச்சேரியில் பாஜக அனைத்து அணிகளின் சார்பிலான மாநாடு இன்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. அதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: ''கடந்த காங்கிரஸ், திமுக ஆட்சியில் மத்தியில் ஊழல் மலிந்திருந்தது. மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பத்திரிகைகளைத் திறந்தாலே ஊழல்தான் இடம்பெறும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து ஊழலற்ற ஆட்சியை அளித்துள்ளார். புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ரூ.600 கோடி மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்முறையாக புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை கட்ட ரூ.500 கோடி வரை புதுச்சேரிக்கு ஒதுக்கியுள்ளது.

பல நல்ல திட்டங்களை தந்துள்ளோம். ரூ.158 கோடி ரயில்வேத் துறைக்கும், மேம்பாலத்துக்கு ரூ.540 கோடியை தந்துள்ளோம். முதல்வராக நாராயணசாமி இருந்தார். அவர் காலி பணியிடத்தை நிரப்ப வாயை திறக்கவில்லை. காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம். உள்துறை அமைச்சர் வெளிப்படையாக 700 பணியிடங்களை தகுதி அடிப்படையில் தற்போது நியமித்துள்ளார். 10 ஆயிரம் பேரை நியமனம் செய்ய ஒப்புதல் தரப்பட்டுள்ளது. சிறப்பு நிதி ரூ.1500 கோடியை பட்ஜெட்டில் இல்லாமல் தந்துள்ளது. புதுச்சேரி மீது அதிக கவனம் செலுத்தி பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

பழங்குடியின பெண்மணியை குடியரசுத் தலைவராக்கியுள்ளார். ஆனால், சமூக நீதி பேசும் தமிழகத்தில் குறிப்பிட்ட பிரிவினர் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலையே உள்ளது. தமிழகத்தில் நாங்கள்தான் 50 ஆண்டுகளாக சமூக நீதி காவலர்கள் என்று பேசுவார்கள். கோயிலுக்குள் பட்டியலின மக்கள் போக முடியாமல் பூட்டி விடுவார்கள். என்ன பிரச்சினை என்று கேட்டால், கோயிலை மூடி விடுவார்கள். குறிப்பிட்ட தலைவர் பட்டியலின இளைஞர்களை திதைச் திருப்புவதாக பேசினார்கள். உண்மையில் வளர்ச்சி பாதையில் இளைஞர்களை திசை திருப்ப வேண்டும். நாம் வளர்ச்சி நோக்கி செல்கிறோம்" என்றார்.

மாநாட்டுக்கு பாஜக புதுவை மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

எந்தத் தூண்டுதலுமில்லை: புதுச்சேரியில் பாஜக அணித் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் முருகன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அமலாக்கத்துறை தன்னிச்சையான அமைப்பாகும். ஆகவே, அவர்களுக்கு கிடைத்தத் தகவலின்படியே சட்டத்துக்கு உள்பட்டே அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆகவே, எந்தத் தூண்டுதல் பேரிலும் சோதனை நடக்கவில்லை'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE