“அமலாக்கத் துறையின் அத்துமீறல் இது...” - செந்தில்பாலாஜி கைதுக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம்

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: “மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூர் எம்.பி. செ.ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி துன்புறுத்தப்பட்டு நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் இதயமான தலைமை செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தும், வேண்டிய பல மணி நேரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்த அமைச்சரை நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசரம் ஏன்?

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் தொடர்ச்சியாகவே இதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவை பாஜகவின் துணை அமைப்புகளாக செயல்படுகின்றன என்பதை இந்த அத்துமீறல் மீண்டும் உறுதிப்படுத்தகிறது.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE