அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை: 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்புள்ளதாக அறிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் கரூர் மற்றும் சென்னையில் உள்ள வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியானது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஓமந்தூரார் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடைபெற்றது. இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதயத்துக்குச் செல்லும் 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதால் பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE