மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

கரூர் மற்றும் சென்னையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) காலை 8 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.

சோதனையானது பல்வேறு குழுக்களாக பிரிந்து மத்திய போலீஸ் பாதுகாப்புப் படை உதவியுடன் நடைபெற்றது. 10 இடங்களில் நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியானது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் 6வது தளத்தில் அவர் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அதிகாரபூர்வமாக தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனைக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE