அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தது அமலாக்கத் துறை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தது அமலாக்கத் துறை. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இன்று அதிகாலை (புதன்கிழமை) 2 மணி வரை சுமார் 18 மணி நேரம் அமைச்சர் செந்தில்பாலாஜி வசித்து வரும் அரசு வீடு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினரின் சோதனை நடைபெற்றது.

நெஞ்சுவலி: காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜியை திமுக உறுப்பினர்கள் யாரும் சந்திக்க அமலாக்கத் துறையினர் சந்திக்க அனுமதிக்கவில்லை. அவரை சந்திக்க அனுமதி வேண்டி அவர்கள் முழக்கமும் எழுப்பி இருந்தனர். இந்தச் சூழலில் அமைச்சர் செந்தில்பாலஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் சென்னை - ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவதாக கூறிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அமலாக்கத் துறை தெரிவித்தது.

செந்தில்பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அறிந்து கொள்ள மருத்துவமனைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் வந்திருந்தனர். அவருக்கு மருத்துவர்கள் வழங்கி வரும் சிகிச்சை குறித்து விசாரித்து உள்ளதாகவும் தகவல். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேகர்பாபு தகவல்: “அமைச்சர் செந்தில்பாலாஜி சுயநினைவின்றி இருக்கிறார். அவர் மயங்கிய நிலையில் உள்ளார். அவரது பெயரை சொல்லி அழைத்த போதும் பதில் தரவில்லை. அவரது ஈசிஜி பரிசோதனை முடிவுகள் இயல்பு நிலையில் இல்லை. அவர் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை அமைந்துள்ள பகுதிக்கு துப்பாக்கி ஏந்திய 50-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

உதயநிதி உறுதி: “ஒன்றிய அரசின் இந்த உருட்டல் மிரட்டலுக்கு திராவிட முன்னேற்ற கழகம் அஞ்சாது. இதனை சட்டப்படி சந்திப்போம். அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை விசாரணைக்காக டெல்லிக்கு அமலாக்கத் துறை கொண்டு செல்கிறதா என்பது இனிதான் தெரியவரும்.

என்ன நடந்தது?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், அவரது தம்பி மற்றும் உதவியாளரின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த இடங்களில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த மாதம் தீவிர சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை அடையாறு பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணி அளவில் வந்தனர். அடையாள அட்டைகளை காண்பித்துவிட்டு, வீட்டுக்குள் சென்றனர். பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடன் வந்திருந்தனர். அப்போது, நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்த அமைச்சரிடம், உதவியாளர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதியிலேயே அவர் வீடு திரும்பினார். பின்னர், அவரும் உடன் இருக்க, வீட்டின் ஒவ்வொரு அறையாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதே நேரத்தில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, அபிராமபுரம் 3-வது தெருவில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, தகவல் அறிந்து வந்த செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள், திமுக நிர்வாகிகள், கட்சியினர் உள்ளிட்டோர் அவரது வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை 9 மணி முதல் சோதனை நடத்தி வந்தனர். அங்கு மத்திய பாதுகாப்பு படையின் பெண் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமகிருஷ்ணபுரம் 2-வது குறுக்கு தெருவில் உள்ள செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், ராயனூரில் கொங்கு மெஸ் மணி, அமைச்சரிடம் கணினி இயக்குபவராக பணியாற்றிய சண்முகம்,நேர்முக உதவியாளராக பணியாற்றிய வேலாயுதம்பாளையம் கார்த்தி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தியது.

மருத்துவமனை முன் குவிக்கப்பட்டுள்ள மத்திய துணை ராணுவத்தினர்

ஈரோடு திண்டல் சக்தி நகரை சேர்ந்த டாஸ்மாக் மதுபான ஒப்பந்ததாரர் சச்சிதானத்தின் வீட்டில், கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி,அவர் மற்றும் மனைவி, மகளிடம் விசாரணை நடத்தினர்.

அதிமுக ஆட்சியில், 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து கழகத்தில்வேலை வாங்கி தருவதாக கூறிபலரிடம் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை தொடக்கத்தில் இருந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையிலும், வருமான வரித் துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனையின் அடிப்படையிலும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததா என்று கண்டறியும் வகையிலும் இந்த சோதனை நடைபெற்றது.

‘முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என கூறிய நிலையில் அமைச்சர் கைது: செய்தியாளர்களிடம் செந்தில்பாலாஜி கூறியபோது, ‘‘எந்த நோக்கத்தில் சோதனை செய்கின்றனர் என்று தெரியவில்லை. வருமான வரித் துறையோ, அமலாக்கத் துறையோ யார் சோதனை நடத்தினாலும் முழு ஒத்துழைப்பு தருவேன்’’ என்றார். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் - செந்தில்பாலாஜியின் உதவியாளரான விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத் துறையின் 3 அதிகாரிகள், இந்தியன் வங்கியின் 2 அலுவலர்கள் ஆகியோர் மத்திய ரிசர்வ் படையின் அதிவிரைவு காவலர்கள் பாதுகாப்புடன் சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேற்று பிற்பகல் வந்தனர். ரிசர்வ் படை காவலர்கள், வளாகத்திலேயே நிற்க, அதிகாரிகள் மட்டும் முதல்வர் அலுவலகம் அருகே உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறைக்கு சென்றனர்.

அவரது உதவியாளரின் உதவியுடன் கணினி மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். வங்கி பரிமாற்றம் தொடர்பான ஆய்வு என்பதால், வங்கி அலுவலர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர். தகவல் அறிந்து, தலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள், பொதுத் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். நேரம் ஆக ஆக, பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள், செய்தியாளர்கள் அதிக அளவில் கூடியதால் பரபரப்பான சூழல் உருவானது. மாலை 4.45 மணி அளவில் ஒரு அதிகாரி மட்டும் புறப்பட்டுச் சென்ற நிலையில், மற்றவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2016 டிசம்பரில், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீடு மட்டுமின்றி, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். தற்போது தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்