சென்னை: தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறையினர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையிலும் சோதனை நடத்தினர். தலைமைச் செயலக அறையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் காட்டம்: தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியது தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அமைச்சர் செந்தில்பாலாஜியின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 'சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், எந்தச் சோதனையாக இருந்தாலும் ஒத்துழைப்பு தருவேன், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதற்கு உரிய விளக்கம் அளிக்கத் தயார்' என்று அமைச்சர் செந்தில்பாலாஜியே பேட்டியும் அளித்துள்ளார். விசாரணை நடைபெறும் இடத்தில் இருந்து முழு ஒத்துழைப்பைத் தந்து வருகிறார்.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை. இவை எல்லாம் விசாரணை அமைப்பானது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது.
பொதுமேடைகளில் திமுகவையும் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்துச் சென்றார் ஒன்றிய அமைச்சர். அதற்குத் தகுந்த விளக்கத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் இதுபோன்ற அமலாக்கத்துறை தாக்குதல்களைத் தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவது ஆகும். ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா? பாஜகவின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். | விரிவாக வாசிக்க > “தலைமைச் செயலகத்தில் செந்தில்பாலாஜி அறையில் சோதனை... பாஜகவின் மிரட்டல் அரசியல்” - முதல்வர் ஸ்டாலின் காட்டம்
» “தமிழக முதல்வரை அச்சுறுத்தும் செயலாகவே சோதனை நடவடிக்கைகள்” - முத்தரசன் கண்டனம்
» “ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தவறாக என்ன பேசினார்?” - சீமான் ஆதரவு கருத்து
காங். தலைவர் கார்கே: சென்னை தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனைக்கும், அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்க்கட்சித் தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மோடி அரசு அச்சுறுத்தி வருகிறது. விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விடலாம் என மோடி அரசு நினைக்கிறது. விசாரணை அமைப்புகளை அரசியல் எதிரிகள் மீது பயன்படுத்துவது மோடி அரசின் செயலாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளை இதுபோன்ற தந்திரங்களின் மூலம் அமைதியாக்கிவிட முடியாது" என்று அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: சென்னை தலைமைச் செயலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். "விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது" என்று மம்தா பானர்ஜி தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்: சென்னை தலைமைச் செயலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைக்கு கண்டனம் தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர் செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் நடத்திய சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாஜக கேடு விளைவிக்கிறது என்றும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் .
சரத் பவார்: சென்னை தலைமைச் செயலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைக்கு தேதியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், செந்தில்பாலாஜி மீதான சோதனை மூலம் தென்மாநிலங்களை பழிவாங்க தொடங்கியுள்ளது அமலாக்கத் துறை என்று அவர் கூறியுள்ளார்.
வைகோ: மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், இவ்வாறு அமலாக்கத் துறை அத்துமீறி நுழைவது மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன. தமிழ்நாட்டிலும் ஒன்றிய பாஜக அரசு அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத் துறையை பயன்படுத்துவதும், திமுக அரசை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். | விரிவாக வாசிக்க > திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே அமலாக்கத் துறை சோதனை: வைகோ கண்டனம்
முத்தரசன்: "அடுத்த வாரத்தில் பிஹார் தலைநகர் பாட்னாவில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து மாநாடு நடத்துவதும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுப்பதும் நாட்டு மக்களிடம் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற விருப்பத்தை தீவிரமாக்கி எழுச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்துவதில் முனைப்புடன் செயலாற்றி வரும் தமிழக முதல்வரையும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளையும் அச்சுறுத்தும் செயலாகவே சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன.
அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற சோதனை அமைப்புகள் பாஜக ஆட்சியில் அரசியல் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.| விரிவாக வாசிக்க > தமிழக முதல்வரை அச்சுறுத்தும் செயலாகவே சோதனை நடவடிக்கைகள் - முத்தரசன் கண்டனம்
முதல்வர் நன்றி: அமலாக்கத் துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்த தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக தலைமைச் செயலகத்தில் ஜனநாயக விரோதமாக அமலாக்கத் துறை சோதனையை ஏவிவிட்டு, கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஊறு விளைவித்த ஒன்றிய பாஜக அரசின் செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தமைக்காக மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி முதலிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் எனது நன்றி.
நாங்கள் துவளாமல், ஊக்கம் குறையாமல் இருக்கிறோம். பாஜகவின் அச்சுறுத்தும் தந்திரங்களையும் ஜனநாயக விரோத சோதனைகளையும் எதிர்ப்பதில் உறுதிப்பாட்டுடன் இருப்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago