திருப்புவனம் அருகே மின்கம்பங்களுக்கு கம்பால் முட்டுக் கொடுத்த ஊழியர்கள் - ஒரு மாதமாக விவசாயப் பணி பாதிப்பு

By இ.ஜெகநாதன்


திருப்புவனம்: திருப்புவனம் அருகே சூறாவளிக் காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்காமல், அவற்றுக்கு மின்வாரிய ஊழியர்கள் கம்பால் முட்டு கொடுத்துவிட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஒரு மாதமாக மின்சாரமின்றி விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பழையனூரில் 12 விவசாய பம்புசெட் மோட்டார்கள் மூலம் 50 ஏக்கருக்கு மேல் நெல், மிளகாய், பருத்தி, கத்தரி போன்றவை சாகுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் அப்பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் பம்புசெட் மோட்டார்களுக்கு செல்லும் 3 மின்கம்பங்கள் சாய்ந்தன. விபத்து அபாயம் இருந்ததால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து கம்பங்களை சீரமைத்து, மின் விநியோகம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் திருப்பாச்சேத்தி மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த ஊழியர்கள் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்காமல், அவற்றுக்கு கம்பால் முட்டு கொடுத்துவிட்டு சென்றனர். இதனால் ஒரு மாதமாக மின் விநியோகமின்றி பம்புசெட் மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பழையனூர் விவசாயிகள் கூறியதாவது: ''பம்புசெட் மோட்டார்கள் மூலம் கோடை விவசாயம் செய்துள்ளோம். கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகமின்றி மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. தொடர்ந்து ஒரு மாதமாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.'' இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE