அதிமுக Vs பாஜக | அண்ணாமலை வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியவில்லை: கரு.நாகராஜன்

By செய்திப்பிரிவு

சென்னை: "ஜெயலலிதாவின் பெயரை வைத்து அரசியல் செய்பவர்கள், எங்கள் தலைவர் அண்ணாமலை மீது அவதூறு பேசுவதும், அவரை குறை சொல்வதும், செயல்பாடுகளைக் குறை சொல்வதும், அவரை பாஜகவுடன் தொடர்புபடுத்தி சொல்லாமல், தனிமைப்படுத்தி பேசுவது வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருக்கிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் பேசியும், தரக்குறைவாக பேசியும், ஓர் உள்நோக்கத்தோடு பேசி அவர் மீது களங்கம் சுமத்த முயன்றுள்ளனர்.

எங்கள் தலைவரை செல்லூர் ராஜூ ஒரு தலையாட்டி பொம்மையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு தமிழக மக்கள் மனதில் ஒரு மாற்றத்தைத் தரக்கூடிய தலைவர் அண்ணாமலை என்ற நிலையை அவர் உருவாக்கியிருக்கிறார். அவரைப் பற்றி பேசுகிற இவர்கள் எவருக்குமே, அண்ணாமலையின் அளவுக்கான சக்தியோ, பலமோ, மக்களின் தலைமையை ஏற்கக்கூடிய பிரதிநிதித்துவமோ முன்னாள் அமைச்சர்களுக்கு கிடையாது.

அண்ணாமலைக்கு இருக்கும் ஆற்றல் கிடையாது. அவரைப் பற்றி பேசுவதற்கான தகுதிகூட இந்த மூன்று பேருக்கும் கிடையாது. தஞ்சாவூர் பொம்மை அது எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம், கோமாளியாக வைக்கலாம் என்று தெர்மகோல் அமைச்சர் பேசுவதுதான் கோமாளித்தனமாக இருக்கிறது. அதேபோல், சி.வி.சண்முகம் பேசினால், பிறகு என்ன பேசினார் என்று அவரைக் கேட்டாலே அவருக்குத் தெரியாது. வாய்க்கு வந்தபடியெல்லாம் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசியது அனைத்துமே அபத்தமானது.

அண்ணாமலை என்பவர் தனிநபர் அல்ல. தமிழக பாஜக என்று தனியாக ஒரு கட்சி இங்கு கிடையாது. பாஜக என்பது தேசத்துக்கு ஒரே கட்சிதான். அந்த கட்சியின் மாநில பொறுப்பை பார்க்கக் கூடியவர் அண்ணாமலை. அவர் தனித் தலைமையோடு, தனித் திட்டங்களோடு அவர் செயல்படுவதில்லை. பாஜகவைப் பொறுத்தவரை, கட்சிப் பதவிகளைவிட, மக்களுக்கான சேவைதான் அதன் முதன்மையான கொள்கை. மக்களுக்கு சேவை செய்வதுதான் இந்தக் கட்சியின் நோக்கம் லட்சியம். அதை திறம்பட செய்யக்கூடிய தலைவர் அண்ணாமலை என்று மக்கள் அவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவருடைய வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், அவர் ஆற்றல் மிகுந்த செயல்பாடுகளைப் பார்த்து பொறாமைப்பட்டு, காழ்ப்புணர்ச்சியோடு, உள்நோக்கத்தோடு, சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் போன்றவர்கள் பேசுவதை மக்கள் எள்ளி நகையாடிக் கொண்டுள்ளனர். அவர்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு கூட்டணிக் கட்சித் தலைவரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற சிந்தனை யாருக்கும் இருக்கக் கூடாது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்தக் கட்சிக்கும் இருக்கக் கூடாது. எனவே, அது தவறானது. கண்டிக்கத்தக்கது. இன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் பேசியது தவறு என்ற வகையில் அவர்களைக் கண்டித்து அவர்கள் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று நான் காத்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் மாநிலத் தலைவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்ததும், அந்தக் கண்டனத் தீர்மானத்துக்கு முன்னதாக, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் இருக்கின்ற தொடர்புகளை எல்லாம் சுட்டிக்காட்டியதும் நாங்கள் வியந்து பார்த்தோம். ஜெயலலிதா மீது நாங்கள் மட்டுமல்ல, பிரதமர் உள்பட அனைவருமே மரியாதை வைத்திருக்கிறோம். அவரைப் போற்றிட தயாராக இருக்கிறோம். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.

ராமருக்கு இந்தியாவில் கோயில் கட்ட வேண்டுமா?என கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியாவில் கட்டாமல், அமெரிக்காவிலா கட்டுவார்கள் என்று கேள்வி எழுப்பிய தலைவி அவர். அவர் மீது எப்போதும் எங்களுக்கு மரியாதை உண்டு. ஆனால், அவரது பெயரை வைத்து அரசியல் செய்யும் இவர்கள்,எங்கள் தலைவர் அண்ணாமலை மீது அவதூறு பேசுவதும், அவரை குறை சொல்வதும், செயல்பாடுகளைக் குறை சொல்வதும், அவரை பாஜகவுடன் தொடர்புபடுத்தி சொல்லாமல், தனிமைப்படுத்தி பேசுவது வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருக்கிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த விவகாரத்தில் கண்டிக்க வேண்டியவர்களைக் கண்டிக்காமல், எங்கள் மாநிலத் தலைவரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதை நாங்கள் எதிர்க்கிறோம்" என்று அவர் கூறினார். | வாசிக்க > ஜெயலலிதாவுக்கு எதிராக அண்ணாமலை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு: அதிமுக கண்டனத் தீர்மானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE