ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முற்பட்டால் மதிமுக போராடும்: துரை வைகோ எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: வேதாந்த குழுமம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முற்பட்டால், மக்களைத் திரட்டி மதிமுக போராடும்” என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எச்சரித்துள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலை தொடர்ந்து விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக 28.05.2018 அன்று தமிழ்நாடு அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட ஆணையிட்டது. இந்த ஆணையை சென்னை உயர் நீதிமன்றமும் 18.08.2020 அன்று உறுதி செய்தது. இந்த ஆணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வேதாந்தா நிறுவனம், வழக்கு நிலுவையில் உள்ள காலகட்டத்தில் ஆலையின் பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தது.

ஆலை பராமரிப்புப் பணிகளின் தேவை குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்திருந்த உயர்மட்டக் குழு ஜூலை 2022ல் அறிக்கை ஒன்றை அரசிடம் தாக்கல் செய்திருந்தது. இதன்படி 10.04.2023 அன்று ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவும், பசுமைப் பரப்பை சீர்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. தூத்துக்குடி ஆட்சியர் 29.05.2023 அன்று பிறப்பித்துள்ள ஆணையின்படி உச்ச நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஆணைகளை நடைமுறைப்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட இக்குழுவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் நடைபெறவுள்ள கழிவுகளை நீக்கும் பணிகளைச் செய்வதற்கான முன் அனுபவமுள்ள நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், வேதாந்தா நிறுமம் வெளியிட்டுள்ள விளம்பர அறிவிப்பில், Expression of Interest (EOI) இன் அடிப்படையில் கட்டிட, கட்டமைப்பு பாதுகாப்பு மதிப்பீட்டாய்வு, ஆலை மற்றும் இயந்திரங்களை பழுது பார்த்தல் / புதுப்பித்தல் / மாற்றுதல், வடிவமைக்கப்பட்ட திறன் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை அடைய ஆலை மற்றும் இயந்திரங்களை இயக்குதல் ஆகியவை அடங்கும்.

ஒப்பந்ததாரர்கள் தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4,000 நபர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதிக திறன் வாய்ந்தவர்கள் முதல் சாதாரண தொழிலாளர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்த, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள உள்ளூர் விற்பனையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உச்ச நீதிமன்ற ஆணையையும் தமிழ்நாடு அரசின் ஆணையையும் அப்பட்டமாக அத்துமீறும் நடவடிக்கையாகும். நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலை தொடங்கப்பட்டபோது ம.தி.மு.க. தூத்துகுடியில் 5.3.1996-இல் உண்ணாவிரதம், 12.03.1996இல் கடையடைப்பு, 1.4.1996-இல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி, 1997 இல் திருவைகுண்டம் முதல் தூத்துக்குடி வரை 3 நாட்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடைபயணம், 30.08.1997-இல் 30,000 பேர் கலந்து கொண்ட ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் என்று பல மக்கள் திரள் போராட்டங்களை நடத்தியது. வைகோ நீதிமன்றங்களில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தானே வாதாடினார். பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கில் வாதாடி 28.09.2010-இல் நச்சு ஆலையை மூட வைத்தார். மீண்டும் 2013-இல் 100 கோடி ருபாய் அபராதத்துடன் ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து ஒவ்வொரு நிலையிலும் நீதிமன்றத்திலும் பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடர்ந்து ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதில் வெற்றியை நிலைநாட்டியுள்ளார் வைகோ. 2018 மே மாதத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து இந்த நச்சு ஆலையை நிரந்தரமாக மூடியுள்ளனர். அவர்கள் தியாகம் வீண்போகாது. வேதாந்த குழுமம் மீண்டும் நச்சு ஆலையை இயக்க முற்படுமானால், 1996-இல் நடைபெற்ற போராட்டங்களை விட இரண்டு மடங்கு உத்வேகத்துடன் மக்களைத் திரட்டி ம.தி.மு.க. போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE