தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை பிரச்சினை | இருப்பதை இடித்துவிட்டு மீண்டும் சாலை மைய தடுப்பு கட்டுவதா?

By பெ.ஜேம்ஸ்குமார்


செம்பாக்கம்: தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை அதிக போக்குவரத்து கொண்டதாக உள்ளது. இதனால் விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகளின் வசதிக்காக, சாலையின் மையப்பகுதியில் கான்கிரீட்தடுப்பு கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் முதல், பள்ளிக்கரணை வரை, புதிய சென்டர்மீடியன் கட்டுவதற்காக, நல்ல நிலையில் இருக்கும் தடுப்பை இடித்து, புதிய கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும்பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக உயரதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சந்தோஷபுரத்தை சேர்ந்த தினகரன் கூறும்போது, தாம்பரம்- வேளச்சேரி பிரதான சாலையில் நல்ல நிலையில் இருக்கும் சாலை மையத் தடுப்பை இடித்து புதிதாக கட்ட ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப் பும் ஏற்கெனவே இருந்ததைப்போல அதே உயரத்திலேயே உள்ளது. அப்படியிருக்கையில், மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணடிக்கலாமா என கேள்வி எழுப்பினார்.

வேளச்சேரி சாலையில் பொது மக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்யாமல் தங்கள் சுயலாபத்துக்காக இதுபோன்ற பணிகளை அதிகாரிகள் மேற்கொள்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த சாலையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.சாலையை பலர் தங்கள் வசதிக்கு ஏற்ப ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இவற்றை அகற்ற முன்வராத அதிகாரிகள், நல்ல நிலையில் உள்ள சாலை தடுப்பை இடித்து தேவையற்ற பணியில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே இந்த பணியை நிறுத்தி, இதற்கான நிதியை வேறு திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும். வேளச்சேரி சாலையில் பல இடங்கள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை இந்த நிதியை கொண்டு சீரமைக்கலாம். மேலும், நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் சாலை உள்ளிட்ட கட்டுமான பணிகள் குறித்து, பணி நடைபெறும் இடத்தில் எந்த அறிவிப்பு பலகையும் வைப்பதே இல்லை. எனவே பணியின் விபரம் குறித்து பொது தகவல்களை குறிப்பிட்டு பலகை வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தாம்பரம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் கேட்டபோது: வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள சென்டர்மீடியன் பல இடங்களில் சேதம் அடைந்தது. இதனால் அவற்றை அகற்றி புதிதாக சென்டர்மீடியன் அமைக்கப்பட்டிருக்கிறது. பொறியாளர் குழுவினர் முறையாக ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் முறைகேடுகள் ஏதும் நடைபெற வாய்ப்பு இல்லை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE