காஞ்சி மாவட்டத்தில் 3,200 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: முழுவதும் மீட்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வருமா?

By இரா.ஜெயப்பிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு இடங்கள் 3,200 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இதில் 1,350 ஏக்கர் இடங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் 1,850 ஏக்கர் நிலங்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன. மீதி நிலங்கள் மீட்கப்படுவதுடன் ஏற்கெனவே மீட்கப்பட்ட இடங்களையும் முறையாக பாதுகாத்து மீண்டும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறுகள் ஓடுகின்றன. அதேபோல் ஏரிகள், குளங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் நீர் நிலை புறம்போக்குகள் அதிகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. மொத்தம் ஆக்கிரமிப்புக்கு உள்ளான 3,200 ஏக்கரில் 1,910 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் ஆகும். இவைகளை வருவாய் துறை கணக்கெடுத்து இவற்றில் 1,220 ஏக்கர் இடங்களை மீட்டுள்ளனர். மேலும் 690 ஏக்கர் இடங்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன. இதேபோல் இதரபுறம்போக்கு இடங்கள் 1,290 ஏக்கர் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதில் 130 ஏக்கர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,160 ஏக்கர் இடங்கள் மீட்கப்படாமல் உள்ளன. இதற்கான மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

வேகவதி ஆறு ஆக்கிரமிப்பு: வேகவதி ஆறு காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் ஓடுகிறது. இதனால் இந்தஆற்றில் 1,200-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். குடியிருக்கும் வீடுகள் என்பதால் இவர்களை உடனடியாக அப்புறப்படுத்தாமல் இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியில் மாற்று இடம் கொடுப்பதற்காக பல கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மாற்று இடம் தயார் செய்யப்பட்ட பிறகும் அரசியல் குறுக்கீடுகள் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

மாற்று குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுவீணாகி வருகின்றன. வேகவதி ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது காஞ்சிபுரம் நகரப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே நீர்நிலை புற்போக்குகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கிவிட்டு ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு காரணமாக நீர்வரத்து பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் குறையும்அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அதேபோல் ஆட்சேபணை இல்லா புறம்போக்குகளில் வசிப்பிடம் உள்ளிட்டவற்றுக்காக குடியிருப்பவர்களுக்கு அரசு விதிகளை பின்பற்றி பட்டா வழங்கி விட்டு ஏக்கர் கணக்கில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் மீட்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து கே.எஸ்.பார்த்த சாரதி கைத்தறி சங்கத்தின் துணைச் செயலர் கே.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, "எல்லா ஆக்கிரமிப்புகளையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. சிலர் வாழ்விடத்துக்கு கூட இடம் இல்லாமல் போதிய வருமானம் இல்லாமலும் ஏரிக் கரைகளிலும், அரசுப் புறம்போக்கு இடத்திலும் குடியிருப்பார்கள். இவ்வாறு நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்போருக்கு வேறு இடங்களில் பட்டா வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் இவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் அகற்றக் கூடாது. ஆனால் ஏரிகளுக்கு வரும் வரத்து வாய்க்கால்களையும், ஏக்கர் கணக்கான இடங்களையும் சிலர் ஆக்கிரமித்து வைத் துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும்" என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலரும் விவசாயிமான அவளூர் சீனுவாசன் கூறும்போது, "அரசுக்கு சொந்தமான இடங்களை பலர் அதிக அளவு ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த இடங்களில் அரசு மீட்டு கையகப்படுத்த வேண்டும். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது வசிப்பிடத்தை இழக்கும் ஏழை மக்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு பட்டா வழங்க வும், இல்லையேல் மாற்று இடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதனிடையே வேகவதி ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பவர்கள் 1,200 பேரில் 90 சதவீதம் பேர் மாற்று இடத்துக்குச் செல்லவில்லை. அவர்கள் மாற்று இடமான அடுக்குமாடி குடியிருப்புக்குச் செல்ல ரூ.2.5 லட்சம் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் பலர் இடம் பெயராமல் உள்ளனர். அந்தப் பணத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசே செய்ய வேண்டும், இல்லையேல் அவர்கள் பணம் செலுத்தும் வகையில் கடன் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

முழு ஏரியும் ஆக்கிரமிப்பு: வரதராஜபுரம் அருகே அணைக்காட்டுதாங்கல் என்ற ஏரி 133 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மொத்த ஏரியும் ஆக்கிரமிக்கப்பட்டு பிளாட்டுகளாக மாற்றி விற்கப்பட்டுள்ளன. அதேபோல் படப்பை அருகே புஷ்பகிரி என்ற இடத்தில் 160 ஏக்கர் மேய்கால் புறம்போக்கு இடங்கள் மொத்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் மேலும் இதுபோல் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க வேண்டும்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷிடம் கேட்டபோது ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு அந்தந்த வட்டாட்சியருக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் முறையான நோட்டீஸ் வழங்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொய்வில்லாமல் நடைபெறும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்