ஜெயலலிதாவுக்கு எதிராக அண்ணாமலை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு: அதிமுக கண்டனத் தீர்மானம்

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கும் விளைவிக்கும் வகையில், பொதுவெளியில் எந்தவிதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியுமற்ற பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பியதற்கு கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி மு.பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம் - புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று (13.06.2023 – செவ்வாய்க்கிழமை), மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

அதிமுகவின் காவல் தெய்வமும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, ஒன்றரைக் கோடி தொண்டர்களுடைய மனதிலும், பொதுமக்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்து, வாழும் தெய்வமாக விளங்கிக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஓர் ஆங்கில பத்திரிகைக்கு, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு கருத்தை பேட்டியாகக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக, ஜெயலலிதாவின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி மற்றும் தேசிய அளவிலான பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்கள். தேசிய தலைவருக்கு நிகரான ஜெயலலிதாவை, பல தலைவர்கள் அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார். சென்னையில், அவரது இல்லத்தில் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளையும் நடத்தி இருக்கிறார்.

தற்போதைய தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு மூலக் காரணமே, ஜெயலலிதா தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து அறிமுகப்படுத்தியதுதான். 1998-ஆம் ஆண்டு முதன்முதலில் மத்தியில் பாஜக ஆட்சி அமையப் பெற, ஜெயலலிதா பெரும்பான்மையான கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அளிக்கச் செய்ததோடு, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கும் அரும்பாடுபட்டவர்.

அதேபோல், 20 ஆண்டு காலமாக தமிழக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொடுத்தவர் கட்சியின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி தலைமையிலான அதிமுக.

தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா 16 ஆண்டுகள் பதவியில் இருந்து, பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். அவரது திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் சிறப்புமிகு நல்லாட்சியை வழங்கியவர். தேசிய அளவில் பல்வேறு திட்டங்களுக்கு முன்னுதாரணமாக வழிகாட்டிய மகத்தான தலைவர் ஆவார். தமிழ்நாட்டின் வரலாற்றில் ஆண்ட கட்சியை மீண்டும் ஆட்சியில் அமரவைத்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா.

இத்தகைய போற்றுதலுக்குரிய ஜெயலலிதாவை, பொதுவெளியில் எந்தவிதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளதற்கு, அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்தத் தீர்மானதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்